Nayanthara Vignesh Shivan: நேத்துதான் கல்யாணம் ஆன மாதிரி இருந்தது.. நயனுக்காக விக்னேஷ் சிவன் பதிவிட்ட காதல் வாழ்த்து..
நேற்றுதான் மணநாள் கண்டதுபோல் இருக்கிறது. ஆனால் இன்று என் நண்பர்கள் முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துகளைக் கூறுகின்றனர்
நேற்றுதான் மணநாள் கண்டதுபோல் இருக்கிறது. ஆனால் இன்று என் நண்பர்கள் முதலாமாண்டு திருமண நாள் வாழ்த்துகளைக் கூறுகின்றனர் என்று நெகிழ்ச்சிபட தனது முதல் திருமண நாளை கொண்டாடுவதைப் பற்றிக் கூறியுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
பிரபல நடிகை நயன்தாரா - பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரின் காதல் திருமணம் மாமல்லபுரத்தில் கடந்த ஆண்டு ஜூன் 9 அன்று நடைபெற்றது.
இந்நிலையில் தங்களின் முதலமாண்டு கல்யாண நாள் பற்றி இன்ஸ்டாகிராமில் விக்கி பதிவிட்டுள்ளார். இது நம் வாழ்வின் மிகப்பெரிய ஆசிர்வாதம். நம்மைச் சுற்றியுள்ள நல்ல மனிதர்களின் ஆசிகள், இறைவனின் அருளால் இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
நயன்தாராவை முதல் முதலில் விக்னேஷ் சிவன் பார்த்ததே நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு கதை சொல்ல போகும்போதுதான். அதன் பிறகு படப்பிடிப்பில்தான் இருவருக்குள்ளும் கெமிஸ்ட்ரி உருவாகி காதலாக மாறியது. ஆனால் அந்த நேரத்தில் அதை வெளியில் சொல்லாமல் இருந்து வந்தனர். படத்தின் ஹீரோ விஜய் சேதுபதிக்கே அப்போது தெரியாது என்று கூறியிருந்தார்.
அதனை முதன் முதலில் ஸ்டேஜில் போட்டுக் கொடுத்தது, மன்சூர் அலி கான் தான். பட விழாவில் பேசிய அவர், "உச்சி வெயிலில் நானெல்லாம் நாலு அஞ்சு பிஸ்லேரி பாட்டில காலி பண்ணிட்டு இருப்பேன். அங்க ரெண்டு சிட்டுக் குருவிகள் உக்காந்து மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருக்கும்" என்று கூற விக்னேஷ் சிவன் உட்பட அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அதன் பிறகுதான் கிசு கிசுவெல்லாம் எழுத ஆரம்பித்தார்கள்.
சிங்கப்பூரில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில்தான் கிட்டத்தட்ட இருவரும் வெளிப்படையாக ஒருவரை ஒருவர் பற்றி பேசிக்கொண்டார்கள். விக்னேஷ் சிவன் சிறந்த இயக்குனர் விருது வாங்கியபோது, நயன்தாராவுக்கு நன்றி சொல்லி, அவரை சிறந்த மனிதர் என்று கூறினார். நயன்தாரா விருது வாங்கும்போதும் விக்னேஷ் சிவனுக்கு நன்றி கூறினார். இருவர் பேசும்போதும் இடைப்பட்ட மிர்ச்சி சிவா, இருவர் காதல் குறித்தும் வெளிப்படையாக கலாய்த்தார். இருவருமே அதனை நல்ல முறையில் எதிர்கொண்டதே இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததற்கு சமமாக பார்க்கப்பட்டது.
நயன்தாரா சமூக வலைத்தளங்களில் இல்லை, ஆனால் விக்னேஷ் சிவன் எப்போதும் அவருடைய புகைப்படங்களை பதிவிட்டுக்கொண்டே இருப்பார். இருவரும் சேர்ந்து எடுத்த செல்பி, புகைப்படங்கள் என வந்துகொண்டே இருக்கும். அதுமட்டுமின்றி ஓணம் கொண்டாடுவது முதல், ஒருவர் மற்றவருடைய பிறந்த நாளுக்கு பிறந்தநாள் பார்ட்டிக்களை அரேஞ் செய்வது என்று அவர்களது கொண்டாட்டங்கள் ஒன்றாக அமைய தொடங்கின.
விக்னேஷ் சிவன், நயன்தாரா இருவருமே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், அடிக்கடி இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், சர்ச்களுக்கு செல்வதை பழக்கமாக வைத்திருந்தனர்.
மார்ச் 25, 2021 இல் விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படம் பதிவிட, அது பெரும் சலசலப்பை கிளப்பியது. அந்த புகைப்படத்தில், நயன்தாரா அவரது மோதிர விரலில் ஒரு மோதிரம் போட்டிருந்தார். அந்த மோதிரம் குறித்த எந்த அறிவிப்பையும் இருவருமே வெளியிடவில்லை. அது குறித்து எந்த தகவலும் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில், விஜய் டிவியில் டிடி நடத்திய லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா என்ற நிகழ்ச்சியில் விடை கிடைத்தது.
அந்த கேள்விக்கு பதிலளித்த அவர், "கல்யாணம் நடந்தா கண்டிப்பா சொல்லுவோம், எல்லாருக்கும் சொல்லி செய்யுறதுதான் கல்யாணம். அது நிச்சயதார்த்த மோதிரம். ரெண்டு பேருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது, அது ஒரு குடும்ப விழா என்பதால் ஒரு பெரிய அறிவிப்பதாக சொல்லவில்லை. மற்றபடி கல்யாணம் கண்டிப்பாக எல்லோருக்கும் சொல்லிதான் நடக்கும்" என்றார்.
நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் எப்போது திருமணம் செய்துகொள்வார்கள் என்ற கேள்வி நாளுக்கு நாள் அதிகரிக்க, காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. அந்த படம் பெரிய ஹிட் ஆக, இவர்களது திருமணத்திற்கான எதிர்பார்ப்பும் கூடியது. அப்போதுதான் இருவரும் தங்களது திருமண தேதியை அறிவித்தனர். 2022 ஜூன் 9 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.