கவர்ச்சி நடிகை என முத்திரை குத்தப்பட்டேன்... கமல் சார் முன்னாடி எல்லாம் ஆட முடியாது என கூறிய ஷர்மிலி
எங்களாலும் நடிக்க முடியும் எங்களுக்கும் திறமை இருக்கு ஆனால் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. கவர்ச்சி நடிகை என முத்திரை குத்திவிட்டார்கள் - நடிகை ஷர்மிலி
90'ஸ் களில் பெரும்பாலான படங்களில் நகைச்சுவை கதாபாத்திரம் மற்றும் கவர்ச்சியில் கலக்கியதன் மூலம் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஷர்மிலி. சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மிகவும் வெளிப்படையாக பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகை ஷர்மிலி.
கவர்ச்சி நடிகை என முத்திரை குத்திவிட்டார்கள் :
இந்த காலகட்டத்தை பொறுத்த வரையில் கிளாமர் நடிகைகள் பலரும் பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பப்படுவார்கள். அதிலும் பெரும்பாலான ஹீரோயின்களே தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார்கள். அப்படி இருக்கையில் அந்த காலத்தில் நீங்கள் ஏன் வேறு எந்த கதாபாத்திரங்களும் நடிக்காமல் கவர்ச்சி மற்றும் நகைச்சுவையில் மட்டுமே கவனம் செலுத்தினீர்கள் என கேட்ட கேள்விக்கு நடிகை ஷர்மிலி பதிலளிக்கையில் " அந்த சமயத்தில் ஒரு காமெடி நடிகை என்றால் காமெடி ட்ராக் மட்டுமே கொடுப்பார்கள், கிளாமர் ரோல் என்றாலும் அது போல தான். ஒரு டான்சராக இருந்த நான் ஒரு பெரிய ஹீரோயினாக வருவேன் என பிரபு சார், விஜயகாந்த் சார் எல்லாம் கூறியுள்ளார்கள். வாய்ப்பு கிடைக்காததால் என்னை கிளாமர் நடிகை என முத்திரை குத்தி விட்டார்கள். எங்களுக்கும் திறமை உள்ளது ஆனால் வாய்ப்பு தர யாரும் முன்வருவதில்லை. எனக்கு நிறைய ரோல்களில் நடிக்க வேண்டும் என ஆசை குறிப்பாக மிகப்பெரிய வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை. பல சீரியல் வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் எனக்கு நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கவே ஆசை. நான் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக இருந்த போது முன்னணி நடிகைகளாக இருந்தவர்கள் ரேவதி, நதியா போன்றவர்கள் தான். ஒரு நடிகை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என ஸ்டீரியோ டைப் லாஜிக் வைத்திருப்பார்கள். அந்த சமயத்தில் ஒரு ஐட்டம் நம்பர் டான்ஸ் என்றால் உடனே சில்க் ஸ்மிதா, டிஸ்கோ சாந்தி, ஷர்மிலி என எங்களை தான் அழைப்பார்கள். அதற்கு பிறகு ரோஜா, ரம்பா, சிம்ரன் இவர்கள் எல்லாம் வந்த சமயத்தில் ஹீரோயின்களே கவர்ச்சி காட்ட தொடங்கியதால் நாங்கள் தேவை படவே இல்லை. இன்றைய காலகட்டத்தில் நடிகைகளே ஐட்டம் பாடலுக்கு நடிப்பதை பெரிதும் விரும்புகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் எங்களுக்கு வேலையே இல்லை" என மிகவும் மன வருத்தத்துடன் பேசியிருந்தார்.
கமல் சாரையே பாராட்ட வைத்த நடிகை :
உலகநாயகன் நடித்த "குணா" திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்xc. இது குறித்து கேட்டதற்கு " நான் ஒரு குரூப் டான்சராக தான் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றேன். "ஒய்லாலோ..." பாடலுக்கு நடனம் ஆட வேண்டிய டான்சர் வராததால் கமல் சார் என்னை அழைத்து இந்து பொண்ணு நல்லா தானே டான்ஸ் ஆடும் இதையே ஆட வைங்க என்றார். அப்போ கூட நான் கமல் சாரை பார்த்து நீங்க இங்க இருந்தீங்கன்னா என்னால ஆட முடியாது. நீங்க ஏதாவது சொல்லிகிட்டே இருப்பீங்க அப்படினு சொன்னேன். அப்படி யாரிடம் என்ன பேச வேண்டும் என்பது கூட எனக்கு தெரியாது. அந்த பாடலுக்கு நான் ஆடிய டான்ஸ் பலரின் பாராட்டை பெற்றது. ஒரு சமயம் ஒரு மேடை நிகழ்ச்சியில் கூட கமல் சார் என்னோட நடிச்சு கைத்தட்டு வாங்கின ஒரே நடிகை நீ தான் என என்னை பாராட்டினார். அந்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது என கூறினார் நடிகை ஷர்மிலி. நடிகர் கமல்ஹாசனுக்கு புன்னகை மன்னன் திரைப்பட ஷூட்டிங் சமயத்தில் இருந்தே நடிகை ஷர்மிலி பழக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கமல்ஹாசனின் பல திரைப்படங்களில் குரூப் டான்சராக இருந்துள்ளார் ஷர்மிலி.