Thangalaan: தமிழ் சினிமாவின் முக்கியமான படம்.. விக்ரம் ரசிகர்கள் தங்கலானுக்கு தயாராகுங்க.. தயாரிப்பாளர் தனஞ்செயன் உற்சாகம்!
Thangalaan: ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 2024ம் ஆண்டை ஒரு அற்புதமான படத்துடன் தொடங்க உற்சாகமாக உள்ளனர். இது பாக்ஸ் ஆபிஸில் நிச்சயம் ஒரு புயலை வீசும் - தங்கலான் படம் குறித்து தனஞ்செயன் ட்வீட்
தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக விளங்கும் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "தங்கலான்" (Thangalaan). பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், ப்ரீத்தி, அர்ஜூன் பிரபாகரன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் பா. ரஞ்சித்தும் ஸ்டுடியோ கிரீன் ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் கே.ஈ. ஞானவேல் ராஜா இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
பீரியாடிக் திரைப்படம் :
ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்க ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் கிஷோர் குமார். கோலார் தங்க வயல் சுரங்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த அசத்தலான கிளாசிக் பீரியாடிக் திரைப்படம். தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவே இதுவரையில் காணாத ஒரு வரலாற்று படமாக "தங்கலான்" அமையும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
பொங்கல் ரிலீசா?
அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு இப்படம் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என்பதை படத்தின் இயக்குநர் பா. ரஞ்சித் சில நாட்கள் முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார். அதைத் தொடர்ந்து "தங்கலான்" ஃபீவர் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
தனஞ்செயன் ட்வீட் :
மிகவும் பிரபலமான தயாரிப்பாளர் ஜி. தனஜெயன் தனது எக்ஸ் தள பக்கம் மூலம் "தங்கலான்" பற்றின ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார். "எனக்கு கதை தெரியும்....படத்தின் மேக்கிங் மற்றும் டீசரை பார்த்தேன். எனது வார்த்தைகளைக் குறியிட்டு இந்த ட்வீட்டைப் பாதுகாக்கவும். இது தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக இருக்கும். 2024ம் ஆண்டின் முதல் சிறந்த படமாக அமையும். சீயான் விக்ரம் நடிப்பு அவருக்கு நல்ல ஒரு அங்கீகாரத்தை பெற்று தரும்.
பா. ரஞ்சித் திரைப்பயணத்தில் இப்படம் நிச்சயம் ஒரு மிகச் சிறந்த படமாக அமையும். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் 2024ம் ஆண்டை ஒரு அற்புதமான படத்துடன் தொடங்க உற்சாகமாக உள்ளனர். இது பாக்ஸ் ஆபிஸில் நிச்சயம் ஒரு புயலை வீசும்..." என பதிவிட்டு இருந்தார்.
மேலும் தனஞ்செயன் மற்றோரு ட்வீட்டில் "தங்கலான் டீசரை தற்போது தான் பார்த்தேன். உலகத்தரம் வாய்ந்த இப்படத்திற்காக பா. ரஞ்சித், சீயான் விக்ரம் மற்றும் ஜி.வி. பிரகாஷ் அசாதாரணமான முயற்சியை எடுத்துள்ளனர். ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பிற்காக காத்திருக்கிறேன்..." என தனது அபரிதமான சந்தோஷத்தை ட்வீட் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
நேற்று ஜி.வி. பிரகாஷ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் " தங்கலான் சம்பவம் சூன்... ஒரு அசாதாரணமான டீசர் விரைவில்" என பதிவிட்டு இருந்தார். அவரைத் தொடர்ந்து தனஞ்செயன் வெளியிட்டுள்ள இந்த போஸ்ட் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் உச்சத்தை எட்டியுள்ளது.