Fahadh Faasil : இம்தியாஸ் அலியின் 10வது படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகும் ஃபஹத் பாசில்... என்ன கதை?
Fahadh Faasil : பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலி இயக்க இருக்கும் 10வது படத்தின் ஹீரோவாக அறிமுகமாகிறார் ஃபஹத் பாசில்.
பாலிவுட் திரையுலகின் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் இம்தியாஸ் அலி. சோச்சா நா தா , ஜப் வி மெட், ராக்ஸ்டார், அமர் சிங் சம்கிலா போன்ற கிளாசிக் படங்களின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அவரின் இயக்கத்தில் வெளியான ஜப் ஹாரி மெட் செஜல் மற்றும் லவ் ஆஜ் கல் 2 உள்ளிட்ட ஒரு சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியான 'சாம்கிலா' நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது தனது அடுத்த படைப்புக்காக தயாராகியுள்ளார் இம்தியாஸ் அலி என்ற தகவல் பாலிவுட் திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இம்தியாஸ் அலி இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிகர் ஃபஹத் பாசில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் சில மாதங்களாக சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். இந்த கூட்டணி மூலம் ஃபஹத் பாசில் பாலிவுட் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்தியாஸ் அலி போன்ற ஒரு இயக்குநருடன் இணைந்து பணிபுரிவது குறித்து உற்சாகமாக இருப்பதாக ஃபஹத் பாசில் தெரிவித்துள்ளார்.
அநேகமாக இப்படம் ஒரு காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் படமாக இருக்கும் என்றும் படத்திற்கு ஏற்ற ஹீரோயின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு தொடக்கத்தில் துவங்கும் என்றும் ஆண்டு இறுதியில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்தியாஸ் அலி தற்போது ஸ்க்ரிப்டை தயார் செய்யும் பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளார். அதன் இறுதிக்கட்டம் தயாராகி வருவதால் அது நிறைவு அடைந்தவுடன் தயாரிப்பு பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவரின் இயக்கத்தில் உருவாகும் 10வது படமாகும்.
View this post on Instagram
இது காதல் கதையாக தான் இருக்கும் என்பதை உறுதி செய்யும் வகையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் லைலா மஜ்னு, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட காவிய காதல் ஜோடிகளின் பெயர்களாக இடம்பெற்றுள்ளது. இது இம்தியாஸ் அலி திரைப்பயணத்தில் ஒரு மைல்கல் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.