Actor Vijay: "ஞாயிற்றுக்கிழமைன்னு கூட பார்க்காம விஜய்க்கு உதவி பண்ணேன்’ - மேடையில் போட்டுடைத்த எடப்பாடி பழனிசாமி..!
சாமானியர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு சாத்தியமில்லை என கூறிய எஸ்.ஏ.சியின் கருத்தை சுட்டிக்காட்டி திரையுலகிலும், அரசியலிலும் முத்திரை பதிப்பது அவ்வளவு எளிதல்ல என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
நடிகர் விஜய் நடித்த மெர்சல் படம் வெளியாக அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி உதவி செய்ததாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மஹாலில் எம்.ஜி.ஆர் கிரியேஷன்ஸ் தொண்டு நிறுவனத்தின் தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு தொண்டு நிறுவனத்தின் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் எடப்பாடி பழனிசாமி பற்றி புகழ்ந்து பேசியதை, அவர் சிரித்தபடியே மகிழ்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது தனது மகனும், நடிகருமான விஜய்யையும் பெயர் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்தார். இதனால் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, அரசியலும் திரைப்படமும் ஒன்றுடன் ஒன்று கலந்து இருப்பதாக தெரிவித்தார்.
View this post on Instagram
அதேசமயம் சாமானியர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு சாத்தியமில்லை என கூறிய எஸ்.ஏ.சியின் கருத்தை சுட்டிக்காட்டி திரையுலகிலும், அரசியலிலும் முத்திரை பதிப்பது அவ்வளவு எளிதல்ல என அவர் கூறினார். இதனையடுத்து ஒரு பெரிய நடிகர். பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டுள்ளவரின் படம் அடுத்த நாள் ரிலீசாக வேண்டியது. ஆனால் படத்தில் விலங்குகள், பறவைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி அதற்கு சான்றிதழ் வாங்காம விட்டுடாங்க.
அதை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதன் தயாரிப்பாளர் வந்தார். நீங்க முதலமைச்சராக இருக்கீங்க. எப்படியாவது வாங்கி கொடுங்க என சொன்னார். அன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை. எப்படி வாங்க முடியும்?. கமிட்டி எல்லாம் கூட்டி கையெழுத்து போட்டால் தான் படம் ரிலீசாகும். ஆனால் படம் ரிலீசாகப்போகுதுன்னு விளம்பரம் பண்ணிட்டோம் என சொல்ல, உடனே என்னுடைய தலைமை செயலாளர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகளோடு போனில் தொடர்பு கொண்டு அடுத்த நாள் அந்த படம் ரிலீசாவதற்கான வேலையைச் செய்து கொடுத்தோம் என கூறியுள்ளார்.
எடப்பாடி சொன்னது எந்த படம் தெரியுமா?
கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் தேதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் மெர்சல் படம் வெளியாகியிருந்தது. சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, கோவை சரளா, சத்யராஜ் என பலரும் நடித்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார்.
படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் இதில் 3 வேடங்களில் விஜய் நடித்திருந்தார். அதில் ஒன்று மேஜிக் மேன் கதாபாத்திரமாகும். படத்தில் இடம் பெற்ற காட்சிகளில் புறா, பாம்பு, குதிரை உள்ளிட்ட உயிரினங்களை பயன்படுத்தியதற்கு விலங்குகள் நல வாரியத்திடம் சான்றிதழ் வாங்கவில்லை என சர்ச்சை எழுந்தது. படம் ரிலீசுக்கு சில தினங்கள் முன்பு தான் நடிகர் விஜய்யும் அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.