Venkat Prabhu: ரஞ்சித் தனி மனிதனாக ஜெயிச்சிட்டார்.. நெகிழ்ந்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு!
இப்ப இருக்கும் நிலைமையில் எல்லாரும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு.
படங்களுக்கு மொழி முக்கியம் இல்லை என மஞ்சுமெல் பாய்ஸ் படம் மூலம் தமிழ் ரசிகர்கள் நிரூபித்து விட்டார்கள் என இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் எடுக்கப்பட்டுள்ள படம் “ஜே.பேபி”. இந்த படத்தில் ஊர்வசி கதையின் நாயகியாக நடித்துள்ள நிலையில் அட்டகத்தி தினேஷ், லொள்ளுசபா மாறன் உள்ளிட்டவர்கள் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். சுரேஷ் மாரி இயக்கியுள்ள ஜே.பேபி படம் மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தினத்தையொட்டி தியேட்டர்களில் வெளியாகிறது. இதனிடையே ஜே.பேபி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் வெங்கட் பிரபு கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நிறைய பேர் இப்படத்தின் இயக்குநர் சுரேஷ் மாரியின் வருகை ரொம்ப லேட் என சொன்னார்கள். அது உண்மை தான். நான், பா.ரஞ்சித், சுரேஷ் மாரி என எல்லாரும் ஒன்று சேர்ந்தது சென்னை 600028 படத்தில் தான். சுரேஷ் மாரியை என்னிடம் அரவிந்த் ஆகாஷ் தான் அறிமுகம் செய்தார். அந்த படத்தில் அவருக்கு சான்ஸ் இல்லை என சொல்லி விட்டேன். அதன்பிறகு அவனுடைய கேரக்டரில் நடித்த பையன் சரியாக கிரிக்கெட் விளையாடாததால் கடைசியாக வேறு வழியில்லாமல் அரவிந்த் ஆகாஷை சேர்த்துக் கொண்டோம்.
நான் வேண்டாம் என சொன்னவுடன் என்னோட நண்பர் ஒருவர் இருக்கிறார் என சொல்லி சுரேஷை சேர்த்து விட்டார். அப்போது அவர் விஷ்ணுவர்த்தனுடன் பணியாற்றி முடித்து இருந்தார். எனக்கும் ஒரு ஆள் தேவை என்பதால் சேர்த்துக் கொண்டேன். இன்று வரை நாங்கள் ஒரு குடும்பமாகவே உள்ளோம். நான் இன்னும் ஜே.பேபி படம் பார்க்கல. ஆனால் என் வீட்டில் இருப்பவர்கள் பார்த்து ரொம்ப என்ஜாய் பண்ணினார்கள்.
உண்மையிலேயே சுரேஷ் மாரி முன்னால் பண்ண காமெடி கதையை இப்போது எடுத்திருந்தால் வேறு மாதிரியாக இருந்திருக்கும். இப்ப இருக்கும் நிலைமையில் எல்லாரும் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. ஹீரோயினே இல்லாமல் ஒரு பசங்க கூட்டத்தை வைத்து ஒரு படத்தை தமிழ்நாட்டில் தமிழ் படத்தை விட பெருசா ஓடிக் கொண்டிருக்கிறது.
ரொம்ப சந்தோசமா இருக்கு, இதன்மூலம் படங்களுக்கு மொழி முக்கியம் இல்லை. கலை தான் முக்கியம் என நிரூபித்து வருகிறார்கள். படம் நன்றாக இருந்தால் போது எந்த மொழியானாலும் தமிழர்கள் கொண்டாடுவார்கள் என உறுதியாகி இருக்கிறது. இப்ப அதே மாதிரி ஜே.பேபி படம் உருவாகியுள்ளது. நடிகை ஊர்வசியை வைத்து ஒரு படம் என்பது கேட்கவே வியப்பாக உள்ளது. சிறப்பு கலைஞராக உள்ள அவரின் ரசிகர்கள் தான் இங்கு இருக்கின்றனர். ரஞ்சித் தனி மனிதனாக நின்று கலையை வைத்து ஒரு உலகமே படைத்து விட்டார். அதை என்னால் கூட பண்ண முடியாது. என்ன சொல்ல வேண்டுமோ அதை தைரியமாக சொல்ல பெரிய மனது வேண்டும்” என இயக்குநர் வெங்கட் பிரபு கூறினார்.