(Source: ECI/ABP News/ABP Majha)
Mohan G : "விஜய் சார் தப்பான வழியில போறாரு.. வருத்தமா இருக்கு.." : விஜய் பற்றி இயக்குநர் மோகன் ஜி
தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது குறித்து இயக்குநர் மோகன்ஜி கருத்து தெரிவித்துள்ளார்
நடிகர் விஜய் ஓனம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காதது வருத்தமளிப்பதாக இயக்குநர் மோகன் ஜி கூறியுள்ளார் .
விஜய் பற்றி மோகன் ஜி
விஜயின் தி கோட் படம் பற்றி பேசிய இயக்குநர் மோகன் ஜி இப்படி கூறினார் " தி கோட் ஒரு நல்ல படம். ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட மகன் விஜயை விட தந்தை விஜய் கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்த கதாபாத்திரத்திற்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்த் வரும் காட்சி முதலில் என்னை கவரவில்லை. ஆனால் பின் அது விஜய் என தெரிந்ததும் எனக்கு பிடித்தது. கேப்டன் விஜயகாந்தை இளமையாக காட்டியிருக்கிறார்கள். இளம் விஜயகாந்தை நிறைய பேர் பார்த்ததில்லை அதனால் பார்க்க பார்க்க தான் அந்த லுக் பிடிக்கும். ஏ.ஐ மூலம் ஒரு நடிகரை உருவாக்க வேண்டும் என்றால் நான் சிவாஜி சாரை தான் கொண்டு வருவேன். தேவர் மகன் மாதிரியான ஒரு படத்தில் அவரைத் தவிர யாருமே நடிக்க முடியாது. நடிப்பதற்கு ஆட்கள் இருந்தாலும் அவர்கள் கேட்கும் சம்பளம் மலையளவு இருக்கிறது" என அவர் கூறினார்.
நடிகர் விஜயின் தி கோட் திரைப்படம் குறித்து இன்று இயக்குநர் மோகன் ஜி பத்திரிகையாளகளை சந்தித்து பேசினார். அப்போது அவர் நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்தார். "விஜய் மாதிரியான ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் யார் தான் வேண்டாம் என்று சொல்வார். தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு ஒரு புது தலைவர் வருவது நல்ல விஷயம்தான். ஆனால் அவரும் வழக்கமான ரூட்டில் செல்வது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது . விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல் ஓணம் பண்டிக்கைக்கு மட்டும் வாழ்த்து தெரிவித்ததில் எனக்கு கடந்த இரண்டு நாட்களாக எனக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு மட்டும் இவ்வளவு எதிர்ப்பு வருவதற்கு காரணம் பயம்தான்.
நீங்கள் விநாயகர் சதுர்த்திக்கு ஆதரவு கொடுத்தால், இந்துக்கள் பண்டிகைக்கு ஆதரவு கொடுப்பது மாதிரி. இந்துக்களுக்கு ஆதரவு கொடுத்தால் அது இந்தியாவை ஆளும் பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பதாக ஆகிவிடும் என்கிற தோரணையை உருவாக்கி விடுகிறீர்கள். விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது வேற.. பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பது வேற” என மோகன் ஜி தெரிவித்துள்ளார்