Mohan G: மேகதாது அணை விவகாரம்.. தமிழக அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சித்த மோகன் ஜி!
மேகதாது அணை கட்டியே தீருவேன் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.ஷிவக்குமார் சபதம் எடுத்த விவகாரத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை இயக்குநர் மோகன் ஜி விமர்சித்துள்ளார்.
மேகதாது அணை கட்டியே தீருவேன் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.ஷிவக்குமார் சபதம் எடுத்த விவகாரத்தில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை இயக்குநர் மோகன் ஜி விமர்சித்துள்ளார்.
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் 543 மக்களவை தொகுதிகளில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கவுள்ளது. இதில் கர்நாடக மாநிலத்தின் சில தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
கர்நாடகாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வரும் ஆளும் காங்கிரஸ் கட்சியின் துணை முதலமைச்சர் டி.கே.ஷிவக்குமார் சில நாட்களுக்கு முன்பு மேகதாது அணை பற்றிய கருத்துகளை தெரிவித்தார். அதில், நல்ல வழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையை கட்டி பெங்களூரு நகருக்கு அங்கிருந்து தண்ணீர் கொண்டு வருவோம் என்கிற ரீதியில் பேசியிருந்தார். மேகதாது அணை கட்ட தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் டி.கே.ஷிவக்குமாரின் பேச்சு பெரும் அதிருப்தியை உண்டாக்கியது.
இதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இப்படியான நிலையில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி கர்நாடகா துணை முதலமைச்சரான டிகே ஷிவக்குமார், “மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம். அந்த அணை திட்டத்தை நிறைவேற்றி சரித்திர சாதனை படைப்பதே என்னுடைய கனவு. இதற்காக தான் நான் கர்நாடகா அரசின் நீர்பாசனத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளேன்” என தெரிவித்திருந்தார். இதுதொடர்பான செய்தியை சுட்டிக்காட்டிய இயக்குநர் மோகன் ஜி, “எப்படி கட்டுவாரு.. அதையும் பார்ப்போம்” என தெரிவித்திருந்தார்.
இதனிடையே நேற்று வெளியிட்ட பதிவில் இந்த செய்தியை குறிப்பிட்டு, “காவிரிக்கு குறுக்கே மேகதாது அணை கட்டி தஞ்சை மாவட்டத்தை பாலைவனமா மாற்றியே தீருவோம் என சபதம் எடுத்தவனுக்கு ஆதரவா அங்கே வாக்கு சேகரிக்க போகும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள் மக்களே.. அரசியல் புரிதல் அவசியம்” என கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு வைரலாகியுள்ளது.
இயக்குநர் மோகன் ஜி
இயக்குநர் மோகன் ஜி “பழைய வண்ணாரப்பேட்டை” படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து திரௌபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.