ஷங்கர், மணிரத்னம் படங்கள் தோல்வி.. மதராஸி ஹிட் ஆகுமா?.. ஏ.ஆர்.முருகதாஸ் பயப்படுகிறாரா?
தமிழ் லெஜண்ட் இயக்குநர்களான ஷங்கர், மணிரத்னம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த், யோகி பாபு, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியாகும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதராஸி ரிலீஸ் எப்போது?
தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் படக்குழு ரிலீஸ் தேதியை மாற்றி வைத்தது. படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில் படத்திற்கான புரோமோஷன் பணியை ஏ.ஆர்.முருகதாஸ் தொடங்கிவிட்டார். தொகுப்பாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் மதராஸி படம் குறித்து சுவாரஸ்யமான பதில்களையும் அவர் அளித்து வருகிறார். மதராஸி படம் எப்படி இருக்கும் என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு கஜினி போன்ற கதையும், துப்பாக்கி மாதிரி ஆக்சனும் இருக்கும் என தெரிவித்தார்.
பெரிய இயக்குநர்களின் படங்கள் தோல்வி
இந்நிலையில், பிரபல சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம் குறித்து பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. அப்போது ஷங்கரின் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் மற்றும் மணிரத்னத்தின் தக் லைஃப் உள்ளிட்ட திரைப்படங்கள் தோல்வியடைந்துள்ளன. சமீபகாலமாக பெரிய இயக்குநர் படங்களின் தோல்வி உங்களுக்கும் பயத்தை அளிக்கிறதா என பிஸ்மி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஏ.ஆர்.முருகதாஸ், கண்டிப்பா அப்படி இல்லை சார், ஷங்கர் மணிரத்னம் படங்கள் கமர்ஷியலைத் தாண்டி சமூக ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சின்ன கருத்து பெரிய கமர்ஷியல் படங்களில் சொல்வது சாதாரண விஷயம் இல்லை.
ஷங்கர், மணிரத்னம் புறக்கணிக்க முடியாது
2 படம் தோல்வியடைந்துவிட்டதால் அவ்வளவு எளிதாக இருவரையும் புறக்கணிக்க முடியாது. ஏற்கனவே ஒருத்தர் போட்ட சாலையில் நடந்து செல்வதற்கு பெரிய கஷ்டம் தெரியாது. ஆனால், புதுசா ஒருத்தன் ரோடு போடனும்னா முள்ளு குத்தும், செடி இருக்கும், கல்லு கிடக்கும் இதையெல்லாம் தாண்டிதான் வெற்றி கிடைக்கிறது. எல்லோரும் போகின்ற பாதையில் போகலை, தனக்கென்று புதுசா ரோடு போடும்போது அப்படித்தான் இருக்கும். மற்ற மொழி படங்களை காட்டிலும் தமிழ் படங்கள் பல விசயங்களை கற்றுக்கொடுக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு இயக்குநர்கள் படத்தின் மூலம் பாடம் எடுக்கிறார்கள். இது மற்ற மொழியில் இல்லை என முருகதாஸ் தெரிவித்தார்.






















