போர் தொழில் படம் வெற்றிக்கும் பின் நிறைய அழுத்தம் இருந்தது...தனுஷின் கர படம் பற்றி விக்னேஷ் ராஜா
தனது முதல் படம் போர் தொழில் படம் வெற்றிபெற்றதால் தனுஷின் கர படத்தை எழுதுவதில் தனக்கு ரொம்ப அழுத்தம் இருந்ததாக இயக்குநர் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார்

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள கர படத்தின் டைட்டில் வீடியோ அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்துள்ளது. இப்படத்தின் கதை குறித்து ரசிகர்கள் பெரியளவில் எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார்கள். கர படம் குறித்து இயக்குநர் விக்னேஷ் ராஜா பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்
2023 ஆம் ஆண்டு அசோக் செல்வன் நடித்த போர் தொழில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் ராஜா. சைக்காலாஜிக்கல் த்ரில்லராக உருவான இப்படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப்படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷை 54 ஆவது படத்தை இயக்கியுள்ளார் விக்னேஷ் ராஜா. அண்மையில் இப்படத்தின் டைட்டில் (கர) வெளியிடப்பட்டது. இரண்டாம் படத்தில் தனுஷை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது குறித்தும் கர படம் குறித்தும் விக்னேஷ் ராஜா பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கர படம் பற்றி விக்னேஷ் ராஜா
கர படத்தின் கதை குறித்து பேசுகையில் " நான் நாளிதழில் பார்த்த இரண்டு வெவ்வேறு செய்திகளின் அடிப்படையில் இப்படத்தின் கதையை உருவாக்கியுள்ளேன். இப்படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்படவில்லை ஆனால் ஒரு சில சம்பவங்கள் நிஜத்தில் நடந்துள்ளன. ர் தொழில் படத்திற்கு பின் தனுஷ் என்னை அழைத்து என்னுடன் பணியாற்ற விருப்பம் தெரிவித்தார். அப்போது என்னிடம் வெறும் ஒன்லைன் மட்டுமே இருந்தது. கதையை முழுவதுமாக எழுதிமுடித்துவிட்டு தனுஷிடம் சொல்ல விரும்பினேன். கதையை எழுதும் போதே தனுஷ் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று தோன்றியது. கதாபாத்திரத்தின் மனதிற்குள் இருக்கும் பதற்றத்தை நுணுக்கமாக ரியாக்ஷனில் காட்ட வேண்டும் . அதே நேரத்தில் இந்த கதாபாத்திரம் அனைவருக்கும் பிடிக்கும் விதமாகவும் இருக்க வேண்டும். அதனால் இந்த கதாபாத்திரத்தை சமநிலையுடன் அனுக நாங்கள் நிறைய பேசினோம். தனுஷ் மாதிரியான ஒரு நடிகரை வைத்துக்கொண்டு இதனை சாத்தியப்படுத்துவது ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது. " என்று அவர் கூறியுள்ளார்
முதல் பட வெற்றி கொடுத்த அழுத்தம்
" போர் தொழில் படத்தின் வெற்றிக்குப் பின் இரண்டாம் படத்திற்கு நிறைய அழுத்தம் இருந்தது. ஒன்று இந்த படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யலாம் இல்லையென்றால் படம் பிடிக்காமல் போகலாம். போர் தொழில் படத்திற்கு முன் நான் வேறு ஒரு நபராகவும் கர படத்திற்கு பின் வேறு ஒரு நபராகவும் மாறியிருக்கிறேன். ஆனால் முடிந்த அளவிற்கு என் மண்டைக்குள் இருந்த சத்தங்களை அமைதிபடுத்தினேன். போர் தொழில் படத்தை எடுத்த அதே நேர்மையுடன் இந்த படத்தையும் அனுகினேன். ' என்று விக்னேஷ் ராஜா கூறியுள்ளார்.




















