Malaikottai Vaaliban: "அத்தனை பேர் இருந்தும் தனிமையாக உணர்ந்தேன்" மோகன்லால் பட நடிகர் உருக்கம்
பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளரான தானிஷ் சைத் மோகன் லாலுடன் மலைகோட்டை வாலிபன் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்
படப்பிடிப்பின் போது தான் மிகவும் தனிமையாக உணர்ந்ததாகவும், தன்னுடைய படக்குழு தன்னை அதில் இருந்து மீட்டதாகவும் நடிகர் தானிஷ் சைத் கூறியுள்ளார்.
மலைகோட்டை வாலிபன்
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள படம் மலைக்கோட்டை வாலிபன். ஈ.மா.யு, ஜல்லிகட்டு, நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களை இயக்கிய லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மது நீலகண்டன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ளார். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பரேடி, சஞ்சனா சந்திரன் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகிய இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரசிகர்ளிடம் வரவேற்பைப் பெற்றது.
தனது அனுபவத்தைப் பகிர்ந்த தானிஷ் சைத்
இப்படத்தில் பிரபல ஆர்.ஜே , காமெடியன் மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளரான தானிஷ் சைத் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் பகிர்ந்துகொண்டார். அதில் படப்பிடிப்பின் போது என்னை சுற்றி நிறைய நபர்கள் இருந்தபோதும் நான் மிக தனிமையாக உணர்ந்தேன். எனது வீடு மற்றும் குடும்பத்தினரை அடிக்கடி நினைவுகூர்ந்தேன். எனக்கு இப்படி இருப்பது குறித்து இயக்குநரிடம் தெரிவித்தேன். அன்று ஷூட் முடிந்ததும் தன்னை வந்து பார்க்கும் படி அவர் சொன்னார்.
அவர் அறைக்கு சென்றபோது படத்தின் முதல் பத்து நிமிடங்களை போட்டு காட்டினார். எனது தனிமை எல்லாம் அந்த இடத்தில் மறைந்து நான் மகிழ்ச்சியாக மாறினேன். எனது மனைவிக்கு ஃபோன் செய்து இதைப்பற்றி பேசினேன். இந்தப் படத்திற்காக எத்தனையோ மனிதர்கள் ஒன்று சேர்ந்து தங்களது உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். என்னைப் போல் எத்தனையோ நபர்கள் தங்களது குடும்பங்களை பிரிந்து வந்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்துகொண்டேன்.” என்று அவர் கூறியுள்ளார்.
வெல்கம் டூ த ஃபேமிலி
முதல் முறையாக நடிகர் மோகன்லாலை சந்தித்த தருணம் குறித்து பேசிய தானிஷ் ” ஜெய்சால்மாரில் படப்பிடிப்பு நடைபெற்ற போது நான் முதல் முறையாக நடிகர் மோகன்லாலை சந்தித்தேன். ஒரு ஷாட் முடிந்ததும் அவர் என்னை கடந்து நடந்து சென்றார். நான் அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். மோகன்லால் என்னிடம் ‘வெல்கம் டூ த ஃபேமிலி’ என்று சொன்னது மனதிற்கு இதமாக இருந்தது. அதற்கு பிறகு நான் நடித்த ஒரு சில காட்சிகளை பார்த்து மோகன்லால் என்னைப் பாராட்டினார். நான் விராட் கோலி, ஏ.பி டிவில்லியர்ஸ் இன்னும் நிறை பிரபலங்களை சந்தித்திருக்கிறேன். ஒரு பெரிய மனிதரை சந்திக்கும் போது அந்த இடம் நமக்கு செளகரியமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம் அது தானாக அமைவது இல்லை. அப்படியான பெரிய மனிதர்களின் நடத்தைகள் நம்மை அப்படி உணர்வைக்கின்றன. மோகன்லாலுடன் எனக்கு அப்படியான ஒரு அனுபவமே ஏற்பட்டது” என்று தானிஷ் சைத் கூறியுள்ளார்