Meera Mithun Update: ஜாதி குறித்த சர்சை பேச்சு: மீரா மிதுனை விசாரிக்க சைபர் க்ரைம் போலீஸ் முடிவு! குவிந்து வரும் புகார்கள்!
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனிடம் விசாரணை மேற்கொள்ள போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனிடம் விசாரணை மேற்கொள்ள போலீஸார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரையுலகிலும் சின்னத்திரையிலும் திறமையால் பிரபலமானவர்கள் பலர் இருக்கையில் சிலர் ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலம் தங்களின் மீது எப்போதும் ஊடக வெளிச்சம் இருக்கும்படி பார்த்துக் கொள்வார்கள்.
அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்துள்ளவர் மீரா மிதுன். அண்மையில் ஒரு யூடியூப் தளத்துக்குப் பேட்டியளித்த அவர், "பொதுவாக நான் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி பேசுவது இல்லை. ஏன் அவர்களைப் பற்றி தவறாகப் பேசுகிற மாதிரி வருகிறது என்றால், எல்லா தாழ்த்தப்பட்ட மக்களும் தப்பான, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
அதனால்தான் அவர்களுக்கு நிறைய பிரச்னைகள் வருகிறது. திரையுலகில் இருக்கும் தாழ்த்தப்பட்ட இயக்குனர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள்தான் எல்லா வேலையும் செய்கிறார்கள், ஏமாற்றுகிறார்கள். அவர்களுக்கு, தாழ்த்தப்பட்ட இயக்குனர்களுக்கு மற்றவர்கள் ஏன் உதவி செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்களை சினிமாவைவிட்டே தூக்க வேண்டும்" என்று வெறுப்பை உமிழ்ந்திருந்தார். இந்தப் பேச்சுக்கு கடும் கண்டனக் குரல் எழுந்திருந்தது. இந்நிலையில், மீரா மிதுன் மீது பலதரப்பினரும் புகார் அளிக்கத் தொடங்கினர்.
விசிக புகார்..
தமிழகம் முழுவதும் புகார் மனுக்கள் குவிந்த நிலையில், சென்னையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியைச் சேர்ந்தவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகியுமான வன்னிஅரசு புகார் அளித்தார்.
இந்தப் புகாரை அடுத்து சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது IPC சட்டப்பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தைத் தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலைத் தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2) (மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராகப் பேசுவது, நடப்பது),வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவைகள் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை வளையத்துக்குள் மீரா..
இந்நிலையில் சாதி வெறியுடன் பட்டியலின மக்களை இழிவாகப் பேசிய நடிகை மீரா மிதுனிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
மீரா மிதுன் ஏற்கெனவே, நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா என பல்வேறு திரைப்பிரபலங்களையும் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்தவர்.
எச்சரித்த பாரதிராஜா..
சூர்யா மீதான அவதூறுப் பேச்சைத் தொடர்ந்து மீரா மிதுனைக் கண்டித்து இயக்குநர் பாரதிராஜா நீண்ட அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
அதில் அவர், 'மீரா வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. உழைத்துப் போராடி, எண்ணங்களை சீர்செய்து நல்ல பெயர் வாங்க முயற்சி செய்யுங்களம்மா. வாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது. அடுத்தவரைத் தூற்றி, பழித்து அதில் கோட்டை கட்டாதீர்களம்மா.. அது மண்கோட்டையாகத்தான் இருக்கும். வார்த்தைகள் பிறருக்கு வலியைத் தருவதாக அமையால், இன்னொருவருக்கு வாழ்க்கையை வளம் ஏற்படுத்தும், பசியைப் போக்கும் அவசியமானவைகளாக அவை உதடுதாண்டி வெளிவரட்டும்' என்று கண்டித்திருந்தார். ஆனாலும் மீரா திருந்தியதாகத் தெரியவில்லை.