தியேட்டர்களில் கூடுதல் கட்டணம்... உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.
தியேட்டர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா என்பதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை செம்பியத்தைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிப்பில் பைரவா படம் வெளியாகியிருந்தது. இந்த படத்துக்கு அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என உத்தவிடக்கோரி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வழக்கு 2017 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, பொதுமக்கள் ஆன்லைன் மூலமாக புக்கிங் செய்வதால் இணையதள சேவை நிறுவனங்கள் சேவை கட்டணம் வசூலிப்பதல் கட்டணம் கூடுகிறது என தியேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அன்றைய தினம் இடைப்பட்ட நேரத்தில் சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் 2 டிக்கெட்டுகளை நீதிபதி முன்பதிவு செய்தார். அப்போது நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட ரூ.60 பெறப்பட்டதாக கூறினார். தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டார்.
பைரவா படம் மட்டுமல்லாமல் தொடந்து வெளியான சிங்கம் 3, விவேகம்,காலா உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸின் போதும் அவர் இதுபோன்ற மனுக்களை தாக்கல் செய்திருந்தார். அதில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் கூடுதல் கட்டண நடைமுறை தொடர்வதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட தியேட்டர்களில் அபராதம் வசூலிக்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் தியேட்டர்கள் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறதா என்பதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு கண்காணிக்க வேண்டும் எனவும் நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்தார்.