S.J.Suryah: 'சம்பாதித்த பணத்தையெல்லாம் சினிமாவிலேயே இழந்தேன்’ .. வேதனையுடன் பேசிய எஸ்.ஜே.சூர்யா..!
அமிதாப்பச்சனை வைத்து எடுத்த படம் நின்றுபோனது. அந்த வலியில் இருப்பதாக பொம்மை படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
அமிதாப்பச்சனை வைத்து எடுத்த படம் நின்றுபோனது. அந்த வலியில் இருப்பதாக பொம்மை படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழில் அபியும், நானும், மொழி, பயணம், காற்றின் மொழி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் அடுத்ததாக ‘பொம்மை’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர், சாந்தினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மான்ஸ்டர் படத்திற்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளதால் படத்திற்கு பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் ஜூன் 16 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது.
இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய எஸ்.ஜே.சூர்யா, “ பொம்மை படம் ரொம்ப நல்லா வந்துருக்குது. இயக்குநர் ராதாமோகன் இந்த கதையை சொல்லும்போது ரொம்ப பிடித்திருந்தது. பாலுமகேந்திரா, மகேந்திரன் படங்களில் இயற்கையான நடிப்பு என்பது இதில் வெளிப்படும். பிரியா பவானி ஷங்கர் நிறைய படம் நடித்திருந்தாலும் இந்த படத்தில் ஸ்பெஷலான நடிப்பு என்பது வெளிப்பட்டுள்ளது. நடிகை சாந்தினி இரண்டாவது ஹீரோயினாக நடித்துள்ளார். ஆனால் அவரின் கேரக்டரும் அழகாக வந்துள்ளது.
நான் ஒரு 4,5 நாட்களாக தூங்கவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு எனது குடும்ப உறுப்பினர்களை கூட அழைக்க முடியவில்லை. பொம்மை எனக்கு முக்கியமான படம். நான் துணை நடிகராக என் சினிமா வாழ்க்கையை தொடங்கினேன். பின்னர் பிளான் போட்டு இயக்குநராகி சம்பாதித்து அதன்பின் அந்த பணத்தை தயாரிப்பாளராக சினிமாவில் போட்டேன். நியூ, அன்பே ஆரூயிரே படத்தை தொடர்ந்து அடுத்த வந்த படங்கள் சரியாக போகாமல் அடிபட்டு, குழிக்குள் விழுந்தேன். திருப்பி அங்கிருந்து எழுந்து இசை என்ற படம் பண்ணி தரையில் வந்து உட்கார்ந்தேன்.
அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் அருளால் ஆரம்பித்த 2வது இன்னிங்ஸில் சம்பாதித்த பிறகு, மீண்டும் தயாரிப்பு வேண்டாம் என நினைத்தேன். ஆனால் ராதாமோகன் கதை சொன்ன மாத்திரத்தில் படம் தயாரிக்க ஒப்புக் கொண்டேன். காரணம் அமிதாப்பச்சனை வைத்து எடுத்த படம் நின்றுபோனது. அந்த வலியில் நான் இருந்தேன். நான் வந்த பணத்தையெல்லாம் மீண்டும் மீண்டும் சினிமாவுக்குள் தான் முதலீடு செய்கிறேன். மக்கள் ஆதரவு அளித்தால் நான் வைத்திருக்கும் பல திட்டங்களை எடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும்” என தெரிவித்தார்.