Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்களின் படத்தில் நடிக்க அழைப்பு வந்ததாகவும் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும் நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார்.
தனுஸ்ரீ தத்தா
ஓய்வுபெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டி வெளியிட்ட அறிக்கை ஒட்டுமொத்த மலையாள திரைத்துறையே ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. திரைத்துறையைச் சேர்ந்த ஆண்களால் பெண்கள் பாலியல் துன்புறுத்தலும் இன்னும் பல சவால்களையும் எதிர்கொள்வதாக இந்த அறிக்கை தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து பல்வேறு நடிகைகள் தைரியமாக முன்வந்து தங்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை பேசினார்கள். இந்த பெண்களுக்கு மற்ற சக நடிகைகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள். மொழி கடந்து தமிழ் திரைத்துறையைச் சேர்ந்தவர்களும் ஹேமா கமிட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.
இதேபோல் கடந்த 2018 ஆம் ஆண்டு மீடூ இயக்கம் தொடங்கி பாலிவுட் மற்றும் கோலிவுட்டைச் சேர்ந்த நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். ஆனால் இவர்களுக்கு பெரியளவில் சக திரைத்துறையினரிடம் இருந்து ஆதரவு கிடைக்கவில்லை. மாறாக திரைத்துறையில் இவர்களுக்கு இருந்த பட வாய்ப்புகளும் திட்டமிட்டு பறிக்கப்பட்டன. அந்த வகையில் பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார் நடிகை தனுஸ்ரீ தத்தா. பாலிவுட்டில் பல வெற்றிப்படங்களில் நடித்த இவர் தமிழில் விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்தார். நானா படேகர் மீது அவர் குற்றச்சாட்டு வைத்ததைத் தொடர்ந்து அவருக்கு இருந்த பட வாய்ப்புகள் ஒவ்வொன்றாக பறிபோகின.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர் பட வாய்ப்பு
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனுஸ்ரீ தத்தா தனக்கு பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பல இயக்குநர்கள்இன் படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்ததாகவும் அனால் தான் அதில் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். “ 2018 ஆம் ஆண்டு எனக்கு ஒரு பெரிய தயாரிப்பாளரிடம் இருந்து நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் அந்த படத்தின் இயக்குநர் மீடூ குற்றச்சாட்டில் சிக்கியவர். இதனால் அதில் நடிக்க நான் மறுத்துவிட்டேன். இந்த இடத்தில் இழப்பு எனக்குதான். பல வருடங்களாக நான் படங்களில் நடிக்கவில்லை. ஆனால் ஒரு சின்ன மாற்றத்திற்காக ஒவ்வொரு நடிரும் சின்ன சின்ன தியாகங்களை செய்ய வேண்டியதாக இருக்கிறது.
இதேபோல் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிரபல வங்க இயக்குநர் ஒருவர் எனக்கு கதை சொன்னார். எனக்கு அந்த கதை ரொம்ப பிடித்திருந்தது. பிறகுதான் அந்த இயக்குநர் மீது மீடூ குற்றச்சாட்டு இருப்பது தெரியவந்தது. வங்கத்தில் அவரது திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட பெண் பக்கம் நின்றார்கள். இதனால் தனது இமேஜை மாற்ற அவர் என்னை இந்த படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார். நான் இந்த படத்தில் நடித்தால் நான் அவருக்கு ஆதரவு கொடுப்பதாக மக்கள் நினைப்பார்கள். இதனால் நான் என்னுடைய தந்தையுடன் கலந்தாலோசித்து அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டேன். சினிமாவில் நடிப்பது என்பது மிகப்பெரிய கனவு. ஆனால் தவறான முன்னுதாரணமாக இருந்துவிட கூடாது என்பதற்காக எனக்கு தேவையானபோதும் நான் படங்களை நிராகரித்து வருகிறேன். அதே போல் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமானால் மற்றவர்களும் இந்த மாதிரியான சின்ன சின்ன தியாகங்களை செய்ய வேண்டும்.” என்று அவர் தெரிவித்துள்ளார்