Kareena Kapoor : டின்னர் டைம் குடும்பத்தோடு தான்... நேர்மையே பிடிக்கும் - 23 ஆண்டுகளாக திரையில் கரீனா கபூர்
திரையில் எது செய்தாலும் அதை மிகவும் உணர்ச்சியோடும் ஆர்வத்தோடும் தான் செய்துள்ளேன். பாக்ஸ் ஆபிஸால் மட்டுமே உச்சத்தை தொட முடியாது. பாக்ஸ் ஆபிஸ் முக்கியமானது தான். ஆனால் அது மட்டுமல்ல.
பாலிவுட் சினிமாவின் பிரபலமான ஹீரோயின்களில் ஒருவரான கரீனா கபூர் திரைத்துறையில் 23 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கரீனா கபூர் எதை செய்தாலும் துறுதுறுப்பாகவும், தன்னிச்சையாகவும், தன்னம்பிக்கையுடனும் எடுத்த காரியத்தை செய்பவர். ஒரு நடிகையாக அவர் இதுவரையில் நடித்த கதாபாத்திரங்கள், தொகுத்து வழங்கிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டுமின்றி ஒரு கணவனுக்கு ஒரு அன்பான மனைவியாக, குழந்தைகளுக்கு சூப்பர் மாம்மாக தன்னுடைய பொறுப்பை சரியாக செய்துள்ளார். கரீனாவின் இந்த 23 ஆண்டுகால பயணத்தை பற்றி சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் பேசியிருந்தார்.
23 ஆண்டுகளாக கரீனா :
23 ஆண்டுகளை கடந்த பின்பும் நீங்கள் பல்வேறு புதிய விஷயங்களை செய்ய முயற்சி செய்கிறீர்கள், பல வகையான கதாபாத்திரங்களை தேர்வு செய்கிறீர்கள் மேலும் முன்பை விடவும் வலிமையாக இருக்கிறீர்கள். அப்படி இருக்கையில் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய விஷயமாக எதை கருதுகிறீர்கள் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கரீனா "என்னை பொறுத்தவரையில் வெற்றியோ அல்லது தோல்வியோ எதுவுமே நிலைக்காது என்பது தான் என்னுடைய மிகப்பெரிய கருத்து. உங்களின் நல்லெண்ணம், அர்ப்பணிப்பு, திரையில் நீங்கள் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள், தேர்ந்து எடுத்த திரைப்படங்கள் இவை மட்டுமே நிலைக்கும். அதை பொறுத்து தான் நீங்கள் ஒரு சிறந்த கலைஞரா இல்லையா என்பதை இறுதியில் அது தான் உங்களை தீர்மானிக்கும். மக்கள் என்னை பற்றி பேசும் போது நன் அன்பானவர் என சொல்வதை நான் விரும்புகிறேன். அந்த உணர்வு தான் முக்கியமானது.
எப்படி இத்தனை ஃபேன் ஃபாலோவர்ஸ்
கடந்த இருபது ஆண்டுகளாக கரீனாவின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறுகிறதா என்பதை எதிர்பார்த்து அவரின் ரசிகர்கள் இருந்ததில்லை. பாலிவுட் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் கரீனா இதை எப்படி எதிர்நோக்குகிறார் என்ற கேள்விக்கு பதிலளிக்கையில் "நான் என்னுடைய வேலைக்கும், எனது அன்புக்குரியவர்களுக்கும், திரையில் நான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கும் நேர்மையானவளாக இருக்கவே விரும்புவேன். என்னுடைய தொழிலுக்காக மட்டுமே திரையில் நடித்தால் நிச்சயம் மக்களால் அதை உணர முடியாது. எனவே நான் திரையில் எது செய்தாலும், பேசினாலும் அதை மிகவும் உணர்ச்சியோடும் ஆர்வத்தோடும் தான் செய்துள்ளேன். பாக்ஸ் ஆபிஸால் மட்டுமே உங்களால் அந்த உச்சத்தை தொட முடியும் என நினைக்கிறீர்களா. பாக்ஸ் ஆபிஸ் முக்கியமானது தான் ஆனால் அது மட்டுமல்ல. நான் யாரையும் போட்டியாக நினைத்ததில்லை. எனக்கு என்ன தேவையோ அதை தான் தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் உள்ளது. நான் எப்போதுமே அந்த விஷயத்தில் மிகவும் லக்கியாக உணர்கிறேன். திருமணம் செய்து கொள்ள விரும்பிய உடன் செய்துகொண்டேன். பெரும்பாலான நடிகைகள் திருமணம் செய்து கொள்ளாத காலம் அது. திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பது என்பது வேறு ஒரு புது உணர்வை கொடுக்கும். குழந்தை வேண்டும் என தோன்றிய போது பெற்றுக் கொண்டேன். இன்றும் நடித்து கொண்டு இருக்கிறேன்" என்றார்.
குழந்தைகளுடன் டின்னர் டைம்:
குழந்தை வேலை இரண்டையும் எப்படி சமாளித்தீர்கள் என கேட்டதற்கு நான் டைம் மேனேஜ்மென்ட் செய்வதில் திறமையானவள் என நினைக்கிறேன். இது தான் இன்றைய வேலை என தெரிந்தவுடன் சீக்கிரம் அதை முடித்துவிடுவேன். டின்னரை குழந்தைகளுடன் சேர்ந்து வீட்டில் சாப்பிடவே விரும்புவேன். அந்த அழகான நேரத்தை என்னிடம் இருந்து யாரும் தட்டி செல்ல முடியாது. என்ன நடந்தாலும் அதில் இருந்து பின்வாங்க மாட்டேன். ஏனெனில் அது நான் வேலை செய்யும் நேரம் அல்ல. எனது குடும்பத்துடன் செலவழிக்கும் நேரம் என்பதால் அதை நான் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன்" என்றார் கரீனா கபூர்.