Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர் கோவிந்தா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தி திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் கோவிந்தா. பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் மட்டுமின்றி இவர் மகாராஷ்ட்ரா மாநிலத்தின் முக்கிய கட்சியான சிவ சேனா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார். கோவிந்தா மும்பையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
கோவிந்தா மீது பாய்ந்த துப்பாக்கி தோட்டா:
கோவிந்தா இன்று மும்பையில் இருந்து கொல்கத்தாவிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக அதிகாலையிலே மும்பையில் உள்ள தனது வீட்டில் இருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டிருந்தபோது கை தவறி கீழே விழுந்தது. அப்போது, துப்பாக்கியில் இருந்து பாய்ந்த தோட்டா கோவிந்தாவின் காலில் பாய்ந்தது.
இதையடுத்து, அவர் வலியில் அலறியுள்ளார். பின்னர், அவரது குடும்பத்தினர் மற்றும் பணியாளர்கள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உடனடியாக ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையால் அவரது காலில் பாய்ந்த குண்டு உடனடியாக அகற்றப்பட்டது. தற்போது அவர் முழு உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்படி நடந்தது இந்த விபரீதம்?
இந்த விவகாரம் தொடர்பாக, நடிகர் கோவிந்தாவின் மேலாளர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் கோவிந்தாவிடம் அனுமதி பெற்ற துப்பாக்கி உள்ளது. அதை எடுக்கும்போது கை தவறி கீழே விழுந்தபோது அவரது காலில் குண்டு பாய்ந்தது. மருத்துவர்கள் தற்போது குண்டை அகற்றியுள்ளனர். தற்போது கோவிந்தா முழு உடல்நலத்துடன் உள்ளார் என்று தெரிவித்தார்.
60 வயதான கோவிந்தா மீது குண்டு பாய்ந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் பெரும் சோகம் அடைந்தனர். கோவிந்தா விரைவில் பூரண குணம் அடைய வேண்டும் என்று பிரபலங்களும், ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். நடிகர், தயாரிப்பாளர், நடன கலைஞர், பாடகர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்ட கோவிந்தா 1986ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார். 2019ம் ஆண்டுக்கு பிறகு அவர் நடிப்புக்கு விடை கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக களமிறங்கிவிட்டார்.
ஏராளமான தொலைக்காட்சி தொடர்களை தொகுத்து வழங்கியதுடன் நடுவராகவும் இருந்துள்ளார். எம்.பி.யாகவும் பொறுப்பு வகித்தள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கோவிந்தா இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.