Biggboss Tamil 5 | 10 வருஷ காதல், அமளி துமளி கல்யாணம்... பிக்பாஸ் ராஜூமோகனின் லவ் ஸ்டோரி
பிக்பாஸில் இரண்டாவது போட்டியாளராக களம் கண்ட ராஜு ஜெயமோகனின் நீண்ட நெடிய காதல் கதையும், அவர்களின் அமளி துமளி திருமண கதையும் ஒரு பழைய யூட்யூப் பேட்டியில் கூறியிருக்கிறார்.
ஒட்டுமொத்த மக்களும் பல மாதங்களாக ஆவலுடன் எதிர் நோக்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அக்டோபர் 3ஆம் தேதி பிரம்மாண்டமாக கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் நாள் நேற்று வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. முதல் நாளன்று ஒவ்வொரு பிரிவினருக்கும் தலைவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது. வழக்கம்போல் வீடு ஆரம்பத்தில் கலகலப்பாக தொடங்கி இனிதே முடிவடைந்தது. அதிலும் குறிப்பாக ராஜு ஜெயமோகன் மற்ற போட்டியாளர்களை கலகலப்பாக வைத்திருந்தார். ஐக்கி பெர்ரியிடமும், தாமரை செல்வியிடமும், அக்ஷரா ரெட்டி ஆகியோரிடம் அவர் செய்த சேட்டைகளை பார்த்திருப்போம்.
திருநெல்வேலியை சேர்ந்த இவர் பிஎஸ்சி விஷ்வல் கம்யூனிகேஷன் முடித்துள்ளார். இயக்குநரும் நடிகருமான பாக்கியராஜ் உடன் சில காலம் உதவி இயக்குநராக வேலை செய்துள்ளார். இவர் முதல் சீரியல் கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீரியல் ஆகும். இதனை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ராஜு. சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார். இதில் கவினின் தோழனாக நடித்திருந்தார். நல்ல ரீச் கிடைத்தது. பின்னர் ஆண்டாள் அழகர் சீரியலில் நடித்தார். பின்னர் படங்களில் நடிக்க தொடங்கினார். முதன் முதலில் 2015ல் துணை முதல்வர் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதன்பிறகு 2017ல் கவினுடன் சேர்ந்து நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் நடித்தார். அதிலும் நண்பன் கேரக்டர்தான். இவர் உண்மையில் பிக்பாஸ் கவினின் நெருங்கிய நண்பர் என கூறப்படுகிறது. பாரதி கண்ணம்மா சீரியலில் வருண் என்ற ரோலில் நடித்தார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் சீசன்2வில் மாயனின் நண்பனாக கதிரேசன் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார். சினிமா நடிகர், சீரியல் நடிகர், உதவி இயக்குநர், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் என பல்வேறு முகங்களை கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ராஜூ ஜெயமோகன் காதல் கதை என்பது ஒரு தனி கதை. அவர் 12 வருடமாக தாரிகா என்ற பெண்ணை காதலித்தார் என்பதும், சமீபத்தில் தான் அவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ராஜூ ஜெயமோகன் தனது காதல், திருமணம் ஆகியவற்றில் சில அமளி துமளிகள் நடைபெற்றதாக ஒரு பழைய பேட்டியில் தெரிவித்துள்ளார். காதல் வாழ்க்கை பல வருடங்களாக தொடர்வதால் சிறு சிறு சண்டைகள் வருமாம், போன் செய்யவில்லை என்றால், போன் செய்து பதிலளிக்கவில்லை என்றால் சண்டை போடுவது போன்ற சிறுபிள்ளை தனமான சண்டைகள் போடுவார்களாம். திருமணத்தில் வந்த பிரச்சனைகள் குறித்து, " காதல் திருமணம் என்பதால் பிரச்சனை செய்வதற்கென்றே யாராவது வந்திருப்பார்கள், பஸ் கிளம்பியதும் யாராவது ஒருவரை மறந்து விட்டு சென்று விடுவோம். அது போன்ற பிரச்சனைகள் வந்தன. எல்லாவற்றையும் மீறி, பத்து வருட காதல் திருமணத்தில் சுபமாக முடிந்தது." என்று ஸ்வீட்டாக கூறி முடிக்கிறார்.