Aishwarya Lekshmi: பூங்குழலியாக மாறிய ஐஸ்வர்யா லட்சுமி..! பொன்னியின் செல்வன் குழு பகிர்ந்த வீடியோ..!
பூங்குழலியாக மாறிய ஐஸ்வர்யா லக்ஷ்மி, இந்த கேரக்டருக்காக ஒத்திகை பார்க்கப்பட்ட காட்சிகள், புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன.
டோவினா தாமஸ் உடன் நடித்த ’மாய நதி’ படம் மூலம் மலையாளம் தாண்டி தமிழ் சினிமா ஆடியன்ஸின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை லக்ஷ்மி ஐஸ்வர்யா லட்சுமி.
பொன்னியின் செல்வன்:
கேரளாவைச் சேர்ந்த நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, விஷால் உடன் 'ஆக்ஷன்’ எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' படத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனையடுத்து சாய் பல்லவி நடித்த கார்கி படத்தில் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார். இந்நிலையில் மணிரத்னத்தின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் அனைவருக்கும் பிடித்த ஓடக்காரப் பெண் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் முதல் பாகம் சென்ற ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றதுடன் ,இவரது கதாபாத்திரமும் நாவலைப் போலவே ரசிகர்களை ஈர்த்து லைக்ஸ் அள்ளியது. முன்னதாக விஷ்ணு விஷாலுடன் கட்டா குஸ்தி படத்திலும் நடித்து தமிழ் ரசிகர்களை ஐஸ்வர்யா லட்சுமி ஈர்த்திருந்தார்.
சொக்க வைக்கும் பூங்குழலி:
இச்சூழலில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகும் நிலையில் மீண்டும் கோலிவுட்டில் பொன்னியின் செல்வன் அப்டேட்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான ட்ரெய்லர், பாடல்கள் முன்னதாக வெளியாகி வரவேற்பைப் பெற்றதுடன் வரிசையாக படக்குழு அப்டேட்களை வாரி வழங்கி வருகிறது.
அந்த வகையில் பூங்குழலியாக மாறிய ஐஸ்வர்யா லக்ஷ்மி, இந்த கேரக்டருக்காக ஒத்திகை பார்க்கப்பட்ட காட்சிகள், புகைப்படங்கள் ஆகியவை இணையத்தில் தற்போது வெளியாகியுள்ளன. முன்னதாக இந்த வீடியோவை லைகா ப்ரொடக்ஷன் பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோவைப் பகிர்ந்து ஐஸ்வர்யா லட்சுமி தன் இன்ஸ்டா பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ ஐஸ்வர்யா லட்சுமியின் பூங்குழலி கதாபாத்திர ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.
View this post on Instagram
முன்னதாக இதேபோல் த்ரிஷாவின் குந்தவை, விக்ரமின் ஆதித்த கரிகாலன், ஜெயம் ரவியின் அருண்மொழி வர்மர் உள்ளிட்ட கதாபாத்திரங்களின் வீடியோக்களும் பகிரப்பட்டு அவை இணையத்தில் வரவேற்பைப் பெற்றன.
கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி, அதே பெயரில் இயக்குநர் மணிரத்னத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி,பார்த்திபன், விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.