`மும்பை அண்டர்வேர்ல்ட் தாதாக்களால் வாய்ப்புகளை இழந்தேன்!’ - பாலிவுட் ரகசியம் சொல்லும் `காதலர் தினம்’ சோனாலி!
அண்டர்வேர்ல்ட் தாதாக்களின் கடும் அழுத்தம் காரணமாகவும், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதாலும் தனக்குத் திரைப்பட வாய்ப்புகளைப் பல இயக்குநர்கள் மறுத்ததாகத் தெரிவித்துள்ளார் நடிகை சோனாலி பெந்த்ரே.
தொண்ணூறுகளில் மும்பை மாநகரின் அண்டர்வேர்ல்ட் தாதாக்களிடம் இருந்து பாலிவுட் பிரபலங்களுக்குத் தொலைபேசியில் மிரட்டல் அழைப்புகள் வருவது வழக்கம். மேலும், அப்போதைய காலத்தில் மும்பையில் அண்டர்வேர்ல்ட் திரையுலகை முழுவதுமாக கைப்பற்றி, பல்வேறு திரைப்பட பைனான்சியர்களையும், தயாரிப்பாளர்களையும் மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
மேலும், திரையுலகம் என்பது முழுமையாக சங்கமாக திரளாத காரணத்தால் அது எளிதாக குறிவைக்கப்படுவதாகப் பிரபல நடிகை சோனாலி பெந்த்ரே தெரிவித்துள்ளார். இவர் தமிழில் `காதலர் தினம்’, `கண்ணோடு காண்பதெல்லாம்’ முதலான திரைப்படங்களில் நடித்தவர்.
சமீபத்தில் இந்தியில் வெளிவரும் `தி ரன்வீர் ஷோ’ என்ற பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் நடிகை சோனாலி பெந்த்ரே. அதில் அவர் அண்டர்வேர்ல்ட் தாதாக்களின் கடும் அழுத்தம் காரணமாகவும், தங்களால் எதுவும் செய்ய முடியாது என்பதாலும் தனக்குத் திரைப்பட வாய்ப்புகளைப் பல இயக்குநர்கள் மறுத்ததாகத் தெரிவித்துள்ளார்.
தொண்ணூறுகள் குறித்து பேசிய நடிகை சோனாலி பெந்த்ரே, `திரைப்படங்களின் பைனான்சியர்களாகப் பலரும் மறைமுகமாக இயங்கி வந்தனர். எனவே திரையுலகம் என்பது வழக்கமான தொழில்துறையாக இல்லாமல் பல்வேறு முறைகேடான வழிகளில் பணம் உள்ளே வரத் தொடங்கியது. வங்கிகள் ஒரு வரம்பு வரை மட்டுமே பணம் தருவார்கள்.. எனவே இவை வங்கிகளால் வழங்கப்பட்டவை அல்ல’ எனக் கூறியுள்ளார்.
எனினும் இதுபோன்ற மர்மமான முறையில் இயங்கும் தயாரிப்பாளர்களிடம் இருந்து தான் விலகியிருக்கவே விரும்புவதாகக் கூறியுள்ள நடிகை சோனாலி பெந்த்ரே, `தயாரிப்பாளர்கள் பேசும் போது, அது சற்றே மர்மமானதைப் போல தோன்றினாலும் நான் அவர்களிடம், `நான் தென்னிந்தியாவில் திரைப்படம் ஒன்றில் நடிக்கிறேன்.. அதனால் என்னால் இதைச் செய்ய முடியாது’ எனக் காரணம் கூறி தப்பிவிடுவேன்’ எனக் கூறியுள்ளார்.
மேலும், ஒரு திரைப்பட பைனான்சியர் சந்தேகப்படும் படியாக நடந்துகொண்டால் அவரை அடையாளம் காண தனது காதலரும் தற்போதைய கணவருமான கோல்டீ பெஹ்ல் உதவி செய்வதாகவும் நடிகை சோனாலி பெந்த்ரே தெரிவித்துள்ளார். கோல்டீ பெஹ்லின் குடும்பத்தினர் திரைப்பட வியாபாரத்தில் பல ஆண்டுகளாக இருந்து வருவதால் திரைப்பட பைனான்சியர்களில் போலியானவர்கள் யார் என்பதை அவரால் எளிதில் புரிந்துகொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் தொண்ணூறுகளில் பாலிவுட்டை மும்பை மாநகரின் அண்டர்வேர்ல்ட் ஆதிக்கம் காரணமாக தனக்கு பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருப்பதாக நடிகை சோனாலி பெந்த்ரேவுக்கு மறுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். `எனக்கு ஏதேனும் திரைப்படத்தில் கதாபாத்திரங்கள் வழங்கப்பட்டிருக்கும். பின்னர் தயாரிப்பாளர்களுக்கு யாரேனும் தொலைபேசியில் அழைத்திருப்பார்கள்.. அதே வேடம் வேறு ஒருவருக்குச் சென்றுவிடும்.. படத்தின் இயக்குநரோ, நடிகரோ அழைத்து, `எனக்கு அழுத்தம் இருக்கிறது.. என்னால் எதுவும் செய்ய முடியாது’ எனக் கூறுவார்கள்.. என்னால் அதையும் புரிந்துகொள்ள முடிகிறது’ எனக் கூறியுள்ளார் நடிகை சோனாலி பெந்த்ரே.
சமீபத்தில் ZEE5 தளத்தில் `தி ப்ரோகன் நியூஸ்’ என்ற சீரிஸ் மூலம் மீண்டும் முன்னணி நடிகையாக கம்பேக் கொடுத்துள்ளார் நடிகை சோனாலி பெந்த்ரே.