Sharmili about Silk Smitha: கண்ணீர் கதைதான் இது: ‘சில்க் ஸ்மிதா மட்டும் உயிரோட இருந்திருந்தா’.. ஷர்மிளி சொன்ன நெகிழ்ச்சி தகவல்..
Sharmili about Silk Smitha: சில்க் ஸ்மிதாவின் நெருங்கிய தோழி, நடிகை ஷர்மி அவர் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
1980களில் தென்னிந்திய திரையுலகையே தன்வசம் வைத்திருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. ஹீரோக்களுக்கும், அவர்களது சண்டை காட்சிகளுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்த அந்த காலத்தில் பல தயாரிப்பாளர்களை தனது வீட்டு வாசலில் லைனில் நிற்க வைத்தவர்தான் இந்த சில்க்.
ஆந்திராவில் எள்ளூரு எனும் இடத்தில் பிறந்த இவர், நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இவரது உண்மையான பெயர், விஜயலக்ஷ்மி வட்லபட்டி. 14 வயதிலேயே கட்டாயக் கல்யாணம் செய்து வைக்கப்பட்டார். புகுந்த வீட்டினர் செய்யும் கொடுமை தாங்க முடியாமல் வெளியில் வந்து விட்டார்.
திக்கு தெரியாமல் சுற்றிக் கொண்டிருந்த இவருக்கு, வழிகாட்டியது சினிமாதான். ஆரம்பத்தில் ஒப்பனைக் கலைஞராக கோலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்த இவர், மெல்ல மெல்ல சிறுசிறு வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். பழம்பெரும் நடிகர் வினுசக்கரவர்த்திதான் இவருக்கு ஸ்மிதா என்ற பெயரையே வைத்தார்.
அதன் பிறகு ஸ்மிதா நடித்த வண்டிச்சக்கரம் படம் மூலம் இவருக்கு ‘சில்க்’ என்ற பெயர் அடைமொழியாக மாறியது. சில்க் ஸ்மிதாவின் அகல கண்களும், வசீகர முகத் தோற்றமும் பார்ப்பவர்களின் மனதை கிறங்கடிக்க செய்தது. இவரது நடிப்பில் வெளியான மூன்று முகம் மெகா ஹிட் படமாக அமைய, இவரைத் தேடி பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது. ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்களுமே சில்க் இருக்கும் திசையைத் தேடி ஓடிய காலம் இன்றும பலரின் கண்முன் வந்து செல்கிறது.
சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாள்:
தனது 17 வருட சினிமா வாழ்க்கையில் தமிழ், தெலங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் மொத்தம் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார் சில்க். திரையில் கவர்ச்சி காட்டும் இவர், உண்மையில் குழந்தை மனம் படைத்தவர். இவரது பாட்டு ஒன்று படத்தில் இருந்தாலே போதும், இவரை பார்ப்பதற்கென்றே கூட்டம் கூடிவிடும் என்று பலரும் கூறுவார்கள். அதுதான் உண்மையாகவும் இருந்தது. சில்க் ஸ்மிதாவை தங்களது படத்தில் நடிக்க/ஆட வைக்க பல தயாரிப்பாளர்கள் இவரது வாசலில் தவமாய் தவமிருந்த காலம் எல்லாம் இருந்தது. சினிமா உலகின் புகழ் உச்சியில் இருந்த இவர், தனது 37 வயதில் காலமானார்.
சில்க் ஸ்மிதாவின் இழப்பை இன்றளவும் ஈடுகட்ட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது தென்னிந்திய சினிமா. காலங்கள் பல கடந்தாலும் இவரது நினைவுகள் மட்டும் அழியாமல் மக்கள் மனதில் அப்படியே பதிந்துள்ளது. சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளையொட்டி, அவரது ரசிகர்களும் நண்பர்களும் அவர் குறித்த நினைவுகளை பல்வேறு இடங்களில் பகிர்ந்து வருகின்றனர். அவ்வகையில் நடனக் கலைஞரும் நடிகையுமாகிய ஷர்மிளி, சில்க் ஸ்மிதா குறித்த சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
ஷர்மிளி-சில்க் ஸ்மிதாவின் சினேகம்:
ஆரம்பத்தில் நடனக் கலைஞராக இருந்து, பின்னர் திரையுலகில் பிரபலமாக மாறியவர்களுள் நடிகை ஷர்மிளியும் ஒருவர். இவர், காமெடி நடிகர்கள் கவுண்டமணி, வடிவேலு உள்ளிட்டோருக்கு ஜோடியாக சில படங்களில் நடித்துள்ளார். இவர், நடிகை சில்க் ஸ்மிதாவுடன் சில பாடல்களில் நடனமாடியுள்ளார். அப்போது நடைப்பெற்ற சில நிகழ்வுகளை கூறியுள்ளார்.
“எனக்கு 13 வயதிலிருந்த போது அவருடன் நிறைய படங்களில் சேர்ந்து ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சூப்பர் ஸ்டாராக இருந்த டைம் அது. 20 படங்களுக்கும் மேல் அவருடன் சேர்ந்து நடனமாடியுள்ளேன். இப்போது உள்ள ஹீரோயின்களெல்லாம் ஷாட் முடிந்தவுடன் ஹீரோ அல்லது இயக்குனருடன் பேசுவார்கள். ஆனால் சில்க் ஸ்மிதாவோ, அவருடன் நடனமாடும் கலைஞர்களுடன் அமர்ந்து உரையாடுவார்” என்று தனது உரையாடலைத் தொடங்குகிறார் ஷர்மிளி.
தொடர்ந்து பேசிய நடிகை, “என்னுடன் நட்பு பாராட்டியது போல வேறு யாருடனுமே அவர் நட்பு பாராட்டியதில்லை” என்று கூறினார். மேலம், இவர் சில்க் ஸ்மிதாவை அக்கா என்று அழைக்கும் போதெல்லாம், ‘அக்கா என்றெல்லாம் கூப்பிடக் கூடாது, உன்னைவிட இரண்டு வயதுதான் பெரியவள்’.
அதனால் என்னை சுமின்னு கூப்பிடு என்று செல்லமாக கடிந்து கொள்வாராம் சில்க். மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவைப் பற்றி மேலும் பகிர்ந்த அவர், அவரைப் போன்று ஒரு காஸ்ட்யூம் போடுபவரை தான் பார்த்தேயில்லை என்று கூறுகிறார். சில்க் ஸ்மிதாவின் குணாதிசியம் குறித்த பேசுகையில், “இப்போது உள்ள 10 வயது குழந்தையின் மெட்ச்யூரிட்டி கூட அவரிடத்தில் இருக்காது. குழந்தை போலத்தான் உரையாடுவார்” என்று கூறுகிறார் ஷர்மிளி.
அதே போல சில்க் ஸ்மிதா எந்த உடை உடுத்தினாலும் அவருக்கு அசிங்கமாகவே தெரியாது எனக் கூறும் அவர் உயிருடன் இருந்திருந்தால், அவர்தான் இன்றுவரை கவர்ச்சி நடிகை என்று கூறுகிறார்.