Rashmika Mandanna | `சினிமாவுல நடிக்கணும்னு ஆசையா? இதை யோசிச்சுக்கோங்க.. எச்சரிக்கும் ராஷ்மிகா மந்தனா...
நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பக்கத்தில் தன் கையின் படத்தை லேசர் சிகிச்சைக்குப் பிறகு பதிவிட்டுள்ளார்.
நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பக்கத்தில் தன் கையின் படத்தை லேசர் சிகிச்சைக்குப் பிறகு பதிவிட்டுள்ளார். நடிகர்களாக விரும்பும் அனைவருக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கட்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
சிவந்த தனது கையின் படத்தைப் பதிவிட்டுள்ள ராஷ்மிகா, `நடிகராக இருந்தால் பல்வேறு நலன்கள் கிடைக்கும் என நினைப்பவர்கள்.. அதனை மட்டும் நினைத்து வந்துவிடாதீர்கள். இந்தத் தொழிலில் இன்னும் பல்வேறு சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணமாக, கணக்கே இல்லாத அளவுக்கு லேசர் சிகிச்சை செய்ய வேண்டியதாக இருக்கும். மேலும் அது அதிகமாக வலி தரக்கூடியதாகவும் இருக்கிறது’ என சோகமான போக்கிமான் ஸ்டிக்கர் ஒன்றுடன் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு, கன்னடத் திரைப்படமான `கிரிக் பார்ட்டி’ மூலமாக அறிமுகமானார் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து 2018ஆம் ஆண்டு, தன் தெலுங்குத் திரையுலக அறிமுகத்தை `சலோ’ படத்தின் மூலமாக நிறைவேற்றினார். இனி 2022ஆம் ஆண்டு, `மிஷன் மஜ்னு’ என்ற படத்தின் மூலமாகத் தனது பாலிவுட் அறிமுகத்தையும் நிகழ்த்த உள்ளார் ராஷ்மிகா மந்தனா. சாந்தனு பக்சி இயக்கியுள்ள இந்தப் படத்தில் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா முன்னணி வேடத்தில் நடித்துள்ளார்.
`மிஷன் மஜ்னு’ படத்தில் பணியாற்றிய போது, தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் பற்றி பேசியுள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, `முதலில் நிகழ்பவை எப்போதுமே ஸ்பெஷல். அதனைப் போலவே, எனது முதல் பாலிவுட் படமான `மிஷன் மஜ்னு’, எனக்கு வெவ்வேறு எல்லைகளையும் கடப்பதற்கான வாய்ப்புகளை அளித்துள்ளது. நான் இந்தப் படத்தின் மூலமாகவும், இந்த அற்புத மனிதர்கள் மூலமாகவும் இந்தி சினிமாவில் நான் என் பயணத்தைத் தொடங்கியதை நினைக்கும் போது, என் மனம் மகிழ்ச்சி கொள்கிறது’ எனக் கூறியுள்ளார்.
இந்தப் படத்தை ஏற்றுக் கொண்டது குறித்த காரணம் கேட்கப்பட்ட போது, `படத்தின் கதையைக் கேட்ட போதே, இந்தப் படத்தில் நான் இடம்பெற வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஏனெனில் நான் இப்போது இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்றால் இந்த வாய்ப்பு எனக்கு கிடைக்காது என எனக்குத் தெரியும். இதுபோன்ற கதாபாத்திரங்கள் கிடைக்காது. `மிஷன் மஜ்னு’ மூலமாக நான் புதிதாகப் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். முதல் முறையாக இந்தியாவின் வடக்குப் பகுதியைச் சுற்றிப் பார்த்திருக்கிறேன். அதன் கலாச்சாரம், மொழி, மக்கள், சினிமா ஆகியவற்றோடு, இத்தனை அழகான படக்குழு, நடிகர்கள் ஆகியோருடன் பணியாற்றியுள்ளேன். இதனைவிட அதிகமாக நான் எதையும் விரும்பியிருக்க முடியாது. ஐ லவ் யூ மிஷன் மஜ்னு’ என்று நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
`மிஷன் மஜ்னு’ படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை நடிகை ராஷ்மிகா தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.