Actress Madhavi: நடிகை மாதவியின் மகள்களா இது? - இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி இதுதான்!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதவியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாதவியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவை பொறுத்தவரை ஹீரோயினாக அறிமுகமாகுபவர்கள் பின்னாளில் அம்மா, அக்கா வேடங்களில் நடித்து பின் சினிமாவில் இருந்தே காணாமல் போவார்கள். சிலர் புகழின் உச்சத்தில் இருக்கும் காலத்தில் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள். இதில் இந்த இரண்டாவது வகையில் ஒருவர் நடிகை மாதவி. விஜயலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட மாதவி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஒரியா என பல மொழிப்படங்களில் நடித்துள்ளார். சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மாதவி, 1976 ஆம் ஆண்டு தொடங்கி 1996 ஆம் ஆண்டுவரை சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
கே.பாலச்சந்தர் இயக்கிய தெலுங்கில் இயக்கிய மரோ சரித்ரா மற்றும் அதன் ரீமேக் படமாக இந்தியில் வெளியான ஏக் துஜே கேலியே படங்களில் துணை வேடத்தில் மாதவி நடித்திருந்தார். அவரை அதே பாலசந்தர் 1981 ஆம் ஆண்டு தில்லு முல்லு படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார். முதல் படமே அவர் ரஜினியின் ஜோடியாக நடித்ததால் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தொடர்ந்து ரஜினியுடன் கர்ஜனை, தம்பிக்கு எந்த ஊரு, உன் கண்ணில் நீர் வடிந்தால் மற்றும் விடுதலை ஆகிய படங்களிலும், கமல்ஹாசனுடன் ராஜ பார்வை, டிக் டிக் டிக், காக்கி சட்டை, சட்டம், எல்லாம் இன்பமயம் மற்றும் மங்கம்மா சபதம் மாதவி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படியான நிலையில் 1996 ஆம் ஆண்டு ரால்ஃப் சர்மா என்பவரை திருமணம் செய்துக் கொண்டு திரையுலகில் இருந்து விலகினார்.
பின் குடும்பத்தோடு அமெரிக்காவில் செட்டிலான மாதவிக்கு 3 மகள்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரான பிரிசில்லா, அதிக மதிப்பெண்கள் பெற்று தனது இளங்கலை கல்லூரி படிப்பை முடித்துள்ளார் என மாதவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த மதிப்பெண்களை பார்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் பிரிசில்லாவை மேற்படிப்புக்காக அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் மாதவிக்கும், மகள் பிரிசில்லாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.