''அம்மாவுடன் கம்பேர் பண்ணி பேசுனாங்க.. உருவக்கேலி பண்ணாங்க'' : உடைந்து பேசிய குஷ்பு மகள் அனன்யா
நான் உருவத்தில் பெரியதாக இருந்தபோது என்னை குண்டு என சொன்னவர்கள், நான் எடையைக் குறைத்த பின் பிளாஸ்டிக் சர்ஜரி, கிழவிபோல் இருக்கிறேன் என சொல்லத் தொடங்கினர்.
குஷ்பு - சுந்தர்.சி தம்பதியினரின் இரண்டாவது மகள் அனந்திதா தான் தன் அம்மாவுடன் அதிகம் ஒப்பிடப்பட்டதாகவும், உருவக்கேலி செய்யப்பட்டதாகவும் அது தன்னை மிகவும் பாதித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளிட்த அனந்திதா சுந்தர் தன் எடை குறைப்பு பயணம், தான் சமூக வலைதளங்களில் எதிர்கொண்ட எதிர்மறைக் கருத்துகள் என பல விஷயங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவை பின்வருமாறு:
'என் அம்மா மிக அழகு, அவருடன் என்னை ஒப்பிட்டார்கள்’
”முன்பு நான் எடை அதிகமாகவும் உருவத்தில் பெரிதாகவும் இருந்தேன். என்னை அதிகம் பாதித்த விஷயம் என்றால், அது என்னை என் அம்மாவுடன் ஒப்பிட்டது. என் அம்மாவைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் மிகவும் அழகுதான்.
ஆனால் நான் என் அம்மா போன்று இல்லை, நான் அழகாக இல்லை என்றெல்லாம் பலரும் சொல்வார்கள். நான் அப்போது மிகவும் சிறிய வயது பெண். அதனால் இது போன்ற கருத்துகள் என்னை மிகவும் பாதித்தன.
ஆனால் அதன் பின் இப்படிப்பட்ட கருத்துகளை எதிர்கொள்ளவும், அவர்களுக்கு பதில் சொல்லவும் நான் கற்றுக் கொண்டேன். நம்மை இதுபோன்ற விஷயங்கள் பாதிக்காமல் வைத்துக் கொள்ள நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு நிறைய நேர்மறை எண்ணங்கள் தேவை.
முன்ன குண்டு, இப்போ பிளாஸ்டிக் சர்ஜரி!
என்னுடைய 10 வயதிலேயே இவற்றை எல்லாம் நான் எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டேன். நான் என் அம்மா- அப்பாவுடன் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லத் தொடங்கினேன். நான் தான் இந்த முடிவை எடுத்தேன். அதன் பின் முடிவெடுத்து பொது நிகழ்வுகளுக்கு செல்வதை நிறுத்தினேன். எனக்கு இயக்குநர் ஆக ஆசை, என் அக்காவுக்கு நடிப்பில் ஆர்வம்.
நான் உருவத்தில் பெரியதாக இருந்தபோது என்னை குண்டு என சொன்னவர்கள், நான் எடையைக் குறைத்த பின் பிளாஸ்டிக் சர்ஜரி என சொல்லத் தொடங்கினர். 16, 17 வயதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய ஒருவரால் முடியாது. மேலும் என்னை எடை குறைக்கச் சொன்னவர்களே நான் எடை குறைத்த பின் கிழவி போல் உள்ளேன் எனக் கூறினர்
என் அப்பா எந்த சமூக வலைதளங்களிலும் இல்லை. ஆனால் நான் ஆக்டிவாக இருந்தபோது அவர் இது வேண்டாம், உன்னை இது பாதிக்கும் எனக் கூறினார்.
புது இன்ஸ்டாகிராம் ஐடி
அம்மா நீ உன்னால் முடிந்த செயல்களை செய் எனக் கூறினார். உன்னை எல்லா இடங்களில் இருந்தும் பாதுகாக்க முடியாது. நீ தான் பார்த்துக்கொள்ள வேண்டும், உன்னால் முடிந்த வரை உன்னை பார்த்துக்கொள். இல்லையென்றால் என்னிடம் வா என்று சொன்னார்.
முதலில் பப்ளிக்காக வைத்திருந்த என் இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை டெலிட் செய்து விட்டு தற்போது ப்ரைவேட்டாக புது கணக்கு தொடங்கி இருக்கிறேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து தன் எடை குறைப்பு பயணம் பற்றி கூறும்போது, ”நான் குண்டாக மட்டும் இல்லை, ஆரோக்கியமான உடல் இல்லாமலும் இருந்தேன். என் அம்மாவை ஏன் இவ்வளவு சாப்பிட விட்டீங்க எனக் கேட்டு கோபப்பட்டேன். என் குடும்பத்தில் பலருக்கும் ஒபேசிட்டி உள்ளது. அதன் பிறகு இரண்டரை ஆண்டுகள் உடற்பயிற்சி செய்து எடையைக் குறைத்துள்ளேன்.
என் அம்மாவும் என் அப்பாவும் என் பழைய ஃபோட்டோக்களை இப்போது பார்க்கும்போது, ”நீ குண்டாக இருந்தது இப்போதுதான் எங்களுக்குத் தெரிகிறது” என்று கூறுகிறார்கள். என் அம்மாவும் அப்பாவும் எனக்கு மிக உறுதுணையாகவும் அதே சமயம் நேர்மையாகவும் இருந்தனர்.
ஃபோனுக்கு பின்னால் தன் முகத்தைக் கூட காட்டாமல் கருத்து சொல்பவர்களுக்காக உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ளத் தேவையில்லை” எனக் கூறியுள்ளார்.