Genelia D'Souza: ’விரட்டிய இந்தி சினிமா.. தென்னிந்திய சினிமா தான் நடிக்கவே காரணம்’ - மனம் திறந்த ஜெனிலியா..!
தனக்கு நடிப்பின் மீது காதல் வர காரணம் தென்னிந்திய சினிமா தான் என நடிகை ஜெனிலியா நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
தனக்கு நடிப்பின் மீது காதல் வர காரணம் தென்னிந்திய சினிமா தான் என நடிகை ஜெனிலியா நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
2003 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் ஜெனிலியா. தொடர்ந்து விஜய்யுடன் நடித்த சச்சின் திரைப்படம் அவருக்கு நல்ல திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின்னர் சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமப்புத்திரன், வேலாயுதம் என சில படங்களில் மட்டுமே ஜெனிலியா நடித்திருந்தாலும் இன்றளவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோயின்களில் ஒருவராகவே திகழ்கிறார்.
அதேசமயம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் ஜெனிலியா நடித்துள்ளார். இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து 2012 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜெனிலியா தனது ஃபிட்னெஸ் வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம்.
இதனிடையே நீண்ட இடைவெளிக்குப்பின் ஜெனிலியா, ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ட்ரையல் பீரியட்’ என்னும் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக பல நேர்காணல்களில் ஜெனிலியா கலந்து கொண்டார்.
அதில் ஒன்றில் பேசிய அவர், ‘நான் முதலில் பாலிவுட்டில் அறிமுகமானாலும், தென்னிந்திய சினிமாவில் நடிக்க சென்ற போது, பாலிவுட் திரையுலகம் என்னை கைவிட்டு விட்டது. அங்கேயே சென்று நடிக்குமாறும் கூறினர். நான் சினிமாவை விரும்ப காரணமே தென்னிந்திய திரையுலகில் நடித்தது தான். தென்னிந்திய சினிமாவில் நடிக்க எனக்கு மிகவும் பிடித்துள்ளது’ என ஜெனிலியா தெரிவித்துள்ளார்.
மற்றொரு நேர்காணலில், நான் சினிமாவுக்கு வந்தபோது என்னுடைய பெயரை மாற்றச் சொன்னார்கள். ஜெனிலியா என்ற பெயரை உச்சரிக்க மக்கள் சிரமப்படுவார்கள் என அதற்கு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் இன்று என்னை மக்கள் அதே பெயருடன் தான் அழைக்கிறார்கள். நல்லவேளை அன்றைக்கு செய்யப்பட்ட பரிந்துரையை நான் ஏற்கவில்லை. ஒருவேளை நான் பெயரை மாற்றியிருந்தால் என்னுடைய பெயர் ‘ஜீனா’ ஆக இருந்திருக்கும்.