Vishnu Vishal: விளையாட்டு வீரர்களுக்கு உதவுவேன்.. நற்பணி மன்றம் தொடங்கிய நடிகர் விஷ்ணு விஷால்!
நடிகர் விஷ்ணு விஷால் தனது 39ஆவது பிறந்தநாளை முன்னிட்டு விளையாட்டு துறையில் உள்ள வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் நற்பணி மன்றம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷ்ணு விஷால் நீர்பறவை, குள்ளநரி கூட்டம், வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கட்டா குஸ்தி உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமாகி கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருகிறார்.
ஜூலை 17ம் தேதியான நேற்று தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் 'லால் சலாம்' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால்.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் கேமியோ ரோலில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். சென்னை, திருவண்ணாமலை, மும்பை பகுதிகளில் ஷீட்டிங் முடிந்த நிலையில் படத்தின் அடுத்தக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்ற அறிவிப்பு வெளியானது.
ஷூட்டிங் ஷெட்யூலின் முடிவு மற்றும் விஷ்ணு விஷால் பிறந்தநாள் இரண்டு நிகழ்வுகளுக்கும் சேர்த்து கேக் வெட்டிக் கொண்டாடியது லால் சலாம் படக்குழு. அந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
இந்நிலையில், விஷ்ணு விஷால் பிறந்தநாளை முன்னிட்டு தனது பெயரில் நற்பணி மன்றம் ஒன்றைத் தொடங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையின்படி "என் மீது அன்பு கொண்ட தம்பிகள் பலர், எனது திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் சமயங்களிலும், எனது பிறந்தநாளிலும் மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நற்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறார்கள். அந்த நற்பணிகளுக்கு ஒரு அங்கீகாரம் வழங்கவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பிறந்தநாள் முதல் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ என்ற அமைப்பை தொடங்கி இருக்கிறோம்.!
இனி எனது ரசிகர்களின் செயல்பாடுகள் அனைத்தும் ‘விஷ்ணு விஷால் நற்பணி மன்றம்’ மூலமாக ஒருங்கிணைக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அடிப்படையில் நான் விளையாட்டுத் துறையில் இருந்து வந்தவன் என்ற முறையில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். அந்த வகையில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை ஹேமாமாலினியும், தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கத்தை திவ்யாவும், டெக்கத்லானில் வெள்ளிப் பதக்கத்தை ஸ்டாலின் ஜோஸூம் வென்று சாதனை படைத்தனர்.
இந்த முயற்சியை மேலும் பெரிதாக்கி விளையாட்டு வீரர்களுக்கு உதவும் வகையில் ஒரு செயல் திட்டத்தை தீட்டிவருகிறோம். அந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை விரைவில் வெளியிட இருக்கிறோம், என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.