‛மொத்த வரியும் செலுத்தியாச்சு... சொன்னதை எப்போ திரும்பப் பெறுவீங்க?: பிடிவாதம் காட்டும் விஜய்!
ரோல்ஸ் ராய்ஸுக்கு மொத்த வரியும் செலுத்திய நிலையில் இந்த வழக்கில் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று நடிகர் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ரோல்ஸ் ராய்ஸுக்கு மொத்த வரியும் செலுத்திய நிலையில் இந்த வழக்கில் தனி நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தனது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று நடிகர் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு கார் ஒன்றை வாங்கியிருந்தார். அந்த காரை பயன்படுத்துவதில்லை என்பதால் அந்த காருக்கான நுழைவுவரியை ரத்து செய்யும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் நடிகர் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், வரியை ரத்து செய்யக்கோரி நடிகர் விஜய்க்கு ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்தார்.
தனிநீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் தனது தீர்ப்பில் வரி என்பது நன்கொடை ஒன்றும் அல்ல. அது கட்டாயமாக செலுத்த வேண்டிய ஒன்று என்றும் கூறினார். இதுதவிர, சமூகநீதிக்காக பாடுபடுவதாக சொல்லிக்கொள்ளும் நடிகர்கள் வரியை செலுத்தாமல் இருப்பது ஏற்கத்தக்கது அல்ல என்றும், வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகத்திற்கு சமம் என்றும் உத்தரவிட்டு நடிகர் விஜயின் மனுவை தள்ளுபடி செய்தார்.
தனி நீதிபதியின் தீர்ப்பில் அதிருப்தியடைந்த நடிகர் விஜய் தன்மீதான விமர்சனத்தை நீக்க கோரியும், அவர் விதித்த அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இதையடுத்து, நடிகர் விஜயின் மேல்முறையீட்டை விசாரித்த நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்திற்கு இடைக்கால தடை விதித்தது.
அதேசமயம், நடிகர் விஜய் செலுத்த வேண்டிய காருக்கான வரியை ஒரு வாரத்தில் வணிகவரித்துறை கணக்கிட்டு சொல்ல வேண்டும் என்றும், மீதமுள்ள 80 சதவீத வரித்தொகையை அடுத்த ஒரு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில், நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியாக ரூபாய் 8 லட்சத்தை செலுத்தியிருந்தார். இந்த நிலையில், மீதமுள்ள ரூபாய் 32 லட்சம் தொகையையும் நடிகர் விஜய் தற்போது செலுத்தியுள்ளார். இதனால், ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரித்தொகையான மொத்தம் ரூபாய் 40 லட்சத்தையும் செலுத்திவிட்டார்.
இந்நிலையில், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், வரி தொடர்பாக தன் மீது முன்வைத்த விமர்சனங்களைத் திரும்பப் பெறுமாறு மீண்டும் வலியுறுத்தியுள்ளார். நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது ஷஃபீக் ஆகீயோர் அடங்கிய அமர்வு முன் நடிகர் விஜய் தரப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடையார் புற்றுநோய் மையத்துக்கு தான் நண்கொடை அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், புஷ்பா சத்யநாராயணா, முகமது ஷஃபீக் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை ஒத்திவைத்துள்ளனர். தனக்கெதிரான கருத்தை நீதிபதி திரும்பப் பெற வேண்டும் என்பதில் விஜய் பிடிவாதமாகவே இருக்கிறார்.