அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோர் தங்கள் திருமணத்தை கிரீஸில் நடத்தினாலும், சுயமரியாதைத் திருமணத்தை தேர்ந்தெடுத்து, அதை மீண்டும் பிரபலப்படுத்தி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் மகளும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சிஇஓ-வுமான காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் கிரீஸில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், நடிகர் ரஜனிகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் சுய மரியாதை திருமணத்தை தேர்வு செய்துள்ளது, இணைய வாசிகளின் கவனத்தை ஈர்த்து, வரவேற்பை பெற்றுள்ளது.
கவனத்தை ஈர்த்த திருமண நிகழ்வு
வழக்கமான புரோகிதர் தலைமையிலான மதச் சடங்குகளிலிருந்து விலகி, பரஸ்பர அர்ப்பணிப்பு மற்றும் சமநிலையை தங்கள் உறவின் மையமாக வைத்த ஒரு விழாவில், இந்தத் தம்பதி கடந்த 11-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். சமூக ஊடகங்களில் வெளியான திருமண புகைப்படங்களில், அவர்கள் இருவரும் செயின்களை மாற்றிக்கொண்டதும், குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அவர்களின் திருமணத்தை வாழ்த்தியதும் காணப்பட்டன. மேலும், இது குறித்து சமூக ஊடகப்பதிவில் விளக்கமளித்துள்ள திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் டி.ஆர்.பி. ராஜா, புதுமணத் தம்பதியினருக்கு சுயமரியாதை திருமணம் நடந்ததை உறுதிபடுத்தினார். இது அதன் முக்கியத்துவம் குறித்த ஆர்வத்தை இளம் தலைமுறையினர் இடையே தூண்டியுள்ளது. அதே நேரத்தில், சுயமரியாதை திருமணம் என்றால் என்ன.? என்ற கேள்வியையும் நம்மிடையே எழசெய்துள்ளது..
சுயமரியாதை திருமணம் என்றால் என்ன.?
சுயமரியாதை திருமணம் என்பது கட்டாயப்படுத்தப்பட்ட சமூகப் கட்டமைப்பு காரணமாகவோ அல்லது விதிக்கப்பட்ட சடங்குகளாலோ வரையறுக்கப்பட்ட ஒரு உறவு அல்ல. மாறாக அது சமமானவர்களுக்கு இடையேயான ஒரு கூட்டாண்மை என்பதே இதன் மையக் கருத்தாகும். இந்த திருமண முறையின் வேரானது, கடந்த 1925-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தவாதி பெரியார் ஈ.வி. ராமசாமியால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தில் அடங்கியுள்ளது.
இந்த திருமண முறையை நடத்தி வைக்க புரோகிதர் தேவையில்லை. தம்பதியின் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் மாலைகள், மோதிரங்கள் உள்ளிட்டவற்றை பரிமாறிக்கொண்டு, தங்கள் உறவை அடையாளப்படுத்தி கொள்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், சுயமரியாதைத் திருமணங்கள் ஆடம்பர திருமணச் சடங்குகளுக்கு ஒரு மாற்று வழியை வழங்குவதோடு, சாதிப் பாகுபாடு மற்றும் பாலின சமத்துவமின்மையுடன் தொடர்புடைய நடைமுறைகளுக்கும் சவால் விடுக்கிறது.
சர்ச்சைக்கு மத்தியில் திருமணமுறை தேர்வு
சமீபத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் பேத்தி செந்தாமரைக்கும், தயாரிப்பாளர் கண்ணன் ரவியின் மகன் தீபக் ரவிக்கும் நடைபெற்ற திருமணத்தில் வைதீக முறை பின்பற்றப்பட்டது, தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில், சமயத்தில் அனிருத் ரவிச்சந்தரும் காவ்யா மாறனும், தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த வரலாற்றில் வேரூன்றிய ஒரு திருமண வழக்கத்தை தேர்வு செய்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















