Notice To Vijay : லியோ பட நான் ரெடி பாடல் ... போதை பழக்கத்தை ஊக்குவிப்பதாக விஜய் வீட்டிற்கு பறந்த நோட்டீஸ்...
நடிகர் விஜயின் லியோ படத்தின் நா ரெடி பாடல் போதை பழக்கத்தை ஊக்குவிப்பதாக கூறி விஜய் வீட்டிற்கு நோட்டீஸ் அனுப்பட்டது.
லியோ திரைப்படத்தின் நா ரெடி பாடல் போதை பழக்கத்தை ஊக்குவிப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆர்.டி.ஐ செல்வம் சார்பாக நடிகர் விஜயின் பனையூர் சாலிகிராமம் முகவரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விஜய்க்கு எதிராக போலீசிடம் புகார் அளித்ததால் ரசிகர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் செல்வம் புகார் தெரிவித்துள்ளார்.
முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ”நா ரெடி பாடல்” விஜயின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜூன் 22ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் அந்த பாடல் தொடர்பாக விஜய் மீது சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம், ஆன்லைன் மூலமாக லியோ பாடலுக்கு எதிராக புகார் அளித்தார்.
அந்த புகார் மனுவில் அவர் தெரிவித்திருப்பதாவது: “நான் சமூக ஆர்வலர் ஆர்.டி.ஐ. செல்வம். நாட்டில் நடக்கக்கூடிய நல்லவை, கெட்டவை அனைத்துக்கும் நீதிமன்றத்தின் மூலமாக தீர்வு கண்டு வருகிறேன்.
தற்போது தமிழக அரசும், காவல்துறையும் போதை தடுப்பு விழிப்புணர்வு செய்து பல குற்ற செயல்களை தடுத்து வருகின்றனர். போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும், ரவுடியிசத்தை உருவாக்கும் வகையிலும் லியோ படத்தின் நான் வரவா நான் ரெடியா இருக்கேன் என்ற பாடல் உள்ளதாக தெரிவித்தார்”.
மேலும் மனுவில், பாடல் வரிகளில் நடிகர் விஜய் இதுபோன்ற சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தும் செயல்களை இளைஞர்களுக்கு மத்தியில் சமுதாயத்தில் போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எனவே, நடிகர் விஜய் மீது போதை தடுப்பு சட்டம் 1985, போதை பொருட்களை ஆதரிக்கும் வகையிலும் பாடலை வெளியீடு செய்த நபர்கள் மீது சட்டப்பிரிவு 31-A படியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழக முதலமைச்சர் சமீபத்தில் போதை பொருளை ஆதரிக்கும் வகையிலும் போதை பொருட்களை தடுப்பதில் கடமை தவறும் அதிகாரிகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை பாயும் என்று கூறியிருந்தார்.
ரவுடியிசத்தை தூண்டுதல், தீய போதைப்பொருட்கள் பயன்பாட்டிற்கு இளைஞர்களை தூண்டிவிடுதல் போன்ற குற்றத்திக்காக இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க கோரி மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க
CM Stalin Speech: தமிழ்நாட்டில் புதியதாக 6 தொழிற்பேட்டைகள் - அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை