Actor Suriya Birthday: நடிகர் சூர்யா பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய நரிக்குறவர் மக்கள்
நடிகர் சூர்யாவின் பிறந்தநாளினை அவரது ரசிகர்கள் நரிக்குறவர் சமுதாய மக்களுடன் ஒன்றிணைந்து கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள சூர்யா நேற்று தனது 48 -வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சூர்யா பிறந்தநாள் அன்று பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிப்பது, அன்னதானம், இரத்ததானம், கல்வி உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். அதேபோல் ரசிகர்கள் போஸ்டர், பேனர், சூர்யா படத்தின் ரீ- ரிலீஸ் என அவரது பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.
இதனிடையே, சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக, அவர் நடிக்கும் கங்குவா படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. மிரட்டும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் வெளியான வீடியோ திரையுலகினரிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார், பி.எஸ்.அவினாஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ள இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கங்குவா படம் 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.
Movie Release This Week: குறிவைக்கப்படும் ஜூலை 28 ஆம் தேதி... ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா?
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை மயிலாடுதுறை மாவட்ட சூர்யா ரசிகர்கள் நற்பணி மன்றத்தினர் ஒன்றிணைந்து கேக் வெட்டியும், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் செம்பனார்கோயில் காவல் நிலையம் எதிரே சாலையோரம் வசிக்கக்கூடிய நரிக்குறவர் சமுதாய மக்களுடன் ஒன்றிணைந்து அவர்கள் கையால் கேக் வெட்டி சிறுவர்களுக்கு வழங்கினர். மேலும் அங்கு வசிக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனமக்களுக்கு ஒரு வேலை மதிய உணவினை ரசிகர்கள் வழங்கியுள்ளனர்.
நரிக்குறவர் இனமக்கள் கேக் வெட்டி மகிழ்ச்சி பொங்க நடிகர் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஜெய் பீம் படத்தில் நடிகர் சூர்யா ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக போராடக்கூடிய கதாபாத்திரமாக நடித்திருப்பார். இந்த நிலையில் அவரது ரசிகர்களும் ஏழ்மை நிலையில் உள்ள மக்களை தேடிக் கண்டறிந்து அவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வருவது பலதரப்பு மக்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.