கிங்காங் வீட்டிற்கு சென்ற சிவகார்த்திகேயன்.. இதுதான் காரணமா.. நெகிழ்ச்சியான சம்பவம்
காமெடி நடிகர் கிங்காங் வீட்டிற்கு திடீரென சிவகார்த்திகேயன் விசிட் அடித்துள்ளார்.

அதிசய பிறவி படத்தில் ரஜினி முன் நடனமாடி அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்வசப்படுத்தியவர் கிங்காங். தமிழ் சினிமாவில் 35 ஆண்டுக்கும் மேலாக பல படங்களில் நடித்து வருகிறார். கந்தசாமி படத்தில் வடிவேலு தூங்கும் நேரத்தில் திருடனாக வந்து சென்ற காட்சிகளை மறக்க முடியாது. அதேபோன்று வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவரது மகள் திருமணம் நடைபெற்றது. இதற்காக, திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.
கிங்காங் மகள் திருமணம்
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த், கமல், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்களையும் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்தார். இதுதொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் வைரலானது. கிங்காங் மகளின் திருமண வரவேற்பில் முதல்வர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் வந்து கலந்துகொண்டனர். நடிகர் பாக்யராஜ், தேவயாணி திருமணம் மண்டபம் வரை வந்தும் கடும் கூட்ட நெரிசலால் மணமக்களை வாழ்த்த முடியாத சூழல் ஏற்பட்டது.
சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகை
அழைப்பு விடுத்தும் வராத பிரபலங்கள் குறித்து பேசிய கிங்காங், அன்பின் பெயராலும், மரியாதை நிமித்தமாக பலரையும் சந்தித்து அழைப்பு வைத்தேன். அவர்களுக்கு பல வேலைகள் நிச்சயம் இருக்கும் இதனால் வரமுடியாமல் போயிருக்கும். அவர்கள் மீது கோபம் கொள்ள முடியாது என தெரிவித்தார். அதேநேரத்தில் நடிகர் கிங்காங்கின் மகள் சிவகார்த்திகேயனின் தீவிரமான ரசிகை. தனது கல்யாணத்திற்கு அவர் வரவில்லை என மிகவும் மனம் வருத்தப்பட்டு பேசியிருந்தார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் கிங்காங் வீட்டிற்கு சென்று மணமக்களை வாழ்த்தி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கிங்காங் மகள் ஆனந்த கண்ணீர்
சிவகார்த்திகேயன் வந்து சென்றது தொடர்பாக பேசிய கிங்காங்கின் மகள், அவர் ஒருவரே தனியாக வீட்டிற்கு வந்தார். பிறகு எங்களை மனதார வாழ்த்தியதை என் வாழ்நாளில் மறக்க முடியாது என சமூகவலைதளத்தில் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீங்க எப்படி இந்த துறையில் கஷ்டப்பட்டு முன்னேறி வந்தீர்களோ அதுபோலத்தான் சிவா நானும் வந்தேன் என கிங்காங் தெரிவித்திருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த சிவகார்த்திகேயன், நீங்க தான சீனியர். உங்களை பார்த்துதான் நான் வந்திருக்கிறேன் என கூறியுள்ளாராம்.



















