இந்த படங்கள் எல்லாம் சிபிராஜ் நடிக்க வேண்டியதா? அத்தனையும் ப்ளாக்பஸ்டர் ஆச்சே!
பிரபல நடிகர் சிபிராஜ் தான் தவறவிட்ட படங்கள் குறித்து நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் தவறவிட்ட படங்கள் தமிழில் ப்ளாக்பஸ்டர் படங்கள் ஆகும்.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களில் ஒருவர் சிபி சத்யராஜ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டென் ஹவர்ஸ் திரைப்படம். இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சிபிராஜ் பல்வேறு நேர்காணல்களை அளித்து வருகிறார்.
தவறவிட்ட படங்கள்:
அப்போது, தனியார் யூ டியூப் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் தவறவிட்ட படங்கள் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார். மரகத நாணயம், குரங்கு பொம்மை, குடும்பஸ்தன் படங்களின் கதை தனக்கே முதலில் வந்ததாகவும், தேதி, கெட்டப், மற்ற படங்களின் படப்பிடிப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த படத்தை ஒப்புக்கொள்ள முடியாமல் போனது என்றும் தெரிவித்துள்ளார்.
நான் மணிகண்டனின் ரசிகர்:
இதுதொடர்பாக, அவரே கூறியதாவது, குடும்பஸ்தன் கதை எனக்கும் வந்தது. இந்த படத்தின் லுக் காரணமாகவும், தேதிகள் காரணமாகவும் அதை ஒப்புக்கொள்ள முடியவில்லை. ஆனால், படமாக பார்க்கும்போது மணிகண்டன் மிக அற்புதமாக பண்ணியிருந்தார். அந்தளவுக்கு நம்ம பண்ணியிருக்க முடியுமா? என்ற கேள்வியும் இருந்தது. நான் அவரோட பெரிய ரசிகன், அவரோட நிறைய மிமிக்ரி பார்த்தேன்.
மனதார பாராட்ட வேண்டும்:
மரகத நாணயம் எனக்கு வந்தது. மகாராஜா படத்தை எடுத்த நிதிலனின் குரங்கு பொம்மை எனக்கு வந்தது. ஆனால், மிஸ் ஆகிவிட்டது. அப்பா அதுபோல நிறைய மிஸ் பண்ணியுள்ளார். நாட்டாமை முதலில் அப்பாவிற்கு வந்தது. நாம மிஸ் பண்ணி நன்றாக செல்லும் அனைத்து படங்களுக்கும் நாம் நடித்திருக்கலாம் என்று தோன்றும். ஆனால், அதையும் தாண்டி கதாநாயகர் சில விஷயங்களை பண்ணும்போது இவர் நன்றாக பண்ணியிருக்கிறார் என்று தோன்றும். இன்னொரு நடிகரை நாம் மனதார பாராட்டினால் மட்டுமே நம்முடைய ப்ளஸ், மைனசை சரி செய்ய முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகிய சிபிராஜ் தொடர்ந்து பல படங்களிலு் நடித்தாலும் நாய்கள் ஜாக்கிரதை, வால்டர், கபடதாரி, மாயோன் போன்ற படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.
முன்னணி நடிகராக உயர்வதற்காக அவர் தொடர்ந்து பல வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து வருகிறார். இளையராஜா கலியபெருமாள் இயக்கியுள்ள இந்த படம் அவரது திரை வாழ்வில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று சிபிராஜ் நம்பிக்கையுடன் உள்ளார். சிபிராஜ் தவறவிட்ட குரங்கு பொம்மை, மரகத நாணயம், குடும்பஸ்தன் படங்கள் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.