Prasanna On Mysskin : ’அந்த’ சீனுக்கு மொத்தம் 16 டேக்... கூலா டீல் செய்த மிஷ்கின்... ’அஞ்சாதே’ சுவாரஸ்யம் சொன்ன பிரசன்னா...
’அஞ்சாதே’ படம் இரண்டு நண்பர்களான நரேன், அஜ்மல் ஆகியோரைப் பற்றியது என்றாலும், இப்படத்தில் கொடூர வில்லனாகத் தோன்றி அனைத்து தரப்பு ஆடியன்ஸ்களிடமும் அப்ளாஸ் வாங்கியவர் நடிகர் பிரசன்னா தான்.
நடிகர்கள் நரேன், பிரசன்னா, அஜ்மல் அமீர், விஜயலட்சுமி ஆகியோரது நடிப்பில் 2008ஆம் ஆண்டு வெளியான படம் ‘அஞ்சாதே’.
தனித்துவமான போலீஸ் படம்
தமிழ் சினிமாவில் வந்த போலீஸ் படங்கள் மற்றும் நண்பர்களைப் பற்றிய படங்களில் இருந்து மாறுபட்டு தமிழ் ஆடியன்ஸ்களுக்கு புதுவித கதைக்களமாக அமைந்த இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க மிஷ்கின் ஆலோசித்து வருவதாகவும் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
'அஞ்சாதே’ வில்லன் பிரசன்னா
’அஞ்சாதே’ படம் இரண்டு நண்பர்களான நரேன், அஜ்மல் ஆகியோரைப் பற்றியது என்றாலும், இப்படத்தில் கொடூர வில்லனாகத் தோன்றி அனைத்து தரப்பு ஆடியன்ஸ்களிடமும் அப்ளாஸ் வாங்கியவர் நடிகர் பிரசன்னா தான். அவரது திரையுலக வாழ்வில் வந்த முக்கியமான படங்களில் அஞ்சாதே நிச்சயம் முக்கிய இடத்தைப் பிடிக்கக்கூடியது.
இந்நிலையில் ‘அஞ்சாதே’ பட கிளைமாக்சில் வில்லன் கதாபாத்திரமான தன் கதாபாத்திரம் கொல்லப்படும் காட்சி குறித்த சுவாரஸ்யத் தகவலை நடிகர் பிரசன்னா பகிர்ந்துள்ளார்.
பிரசன்னா பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்
முன்னதாக தனியார் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “கேமரா எல்லோரையும் சுற்றி சுற்றி வரும், 14, 15 ரவுண்டுகள் வரும். அதற்குப் பிறகு என்னை அடித்து முட்டி போட வைத்து என்கவுண்டர் செய்வார்கள்.
இது முழுவதும் ஒரே ஷாட். கேமரா கீழே இருக்கும். கேமரா கிட்ட சரியாக விழணும். முதல் டேக் மிஷ்கின் எதிர்ப்பார்த்த மாதிரி சரியாக வந்தது. ஆனால், கேமராவில் அதை பார்க்கும்போதுதான், அசிஸ்டண்ட் ஒருவர் திரையில் தவறுதலாக வந்தது தெரிய வந்தது. அதன் பிறகு பல டேக் எடுத்தும் முதல் டேக் போல் சரியாக வரவில்லை.
மொத்தம் 16 டேக்... கூலா டீல் செய்த மிஷ்கின்
தொடர்ந்து 15, 16 டேக் போய் எதுவும் சரியாக வராததால் விக்கை கழற்றி வீசிவிட்டு ஷூட்டிங் நடந்த கரும்பு காட்டுக்குள் போய் உட்கார்ந்து விட்டேன்.
அதன் பிறகு நீண்ட நேரம் கழித்து என் அருகே வந்து அமர்ந்த மிஷ்கின், ’என்னடா ஷூட் போலாமா, எடுக்கலாமா...’ என கூலாக கேட்டுவிட்டு, விக்கை எடுத்து என் தலையில் மாட்டிவிட்டு ஷூட் செய்தார். அந்த 16 ஆவது டேக் தான் அந்த கிளைமாக்ஸ் காட்சி ஓகே ஆனது” என மகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
தொடர்ந்து, ”உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் நடித்ததில் பிடித்த படம் எது?” என்ற கேள்விக்கு, ”நான் நடித்த படங்களில் என் பையன் பார்த்த முதல் படம் மாஃபியா. அதை அவர் அதிகம் விரும்பி பார்ப்பார். ஆனால் அவரால் க்ளைமேக்சில் என் கதாபாத்திரம் தன்னைத் தானே சுட்டுக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி இப்படி செய்யாதீர்கள் என என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.