Director Prashanth Neel : ராக்கி பாய் இயக்குநருக்கு பிறந்தநாள்..! நச்சுனு வாழ்த்து தெரிவித்த பாகுபலி!
சமீபத்தில் கே.ஜி.எஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலின் பிறந்த நாளின் போது, அவரை வாழ்த்தும் விதமாக அவருடன் `சலார்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட கேண்டிட் படம் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் நடிகர் பிரபாஸ்.
பிரஷாந்த் நீல்...
சமீபத்தில் கே.ஜி.எஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலின் பிறந்த நாளின் போது, அவரை வாழ்த்தும் விதமாக அவருடன் `சலார்’ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட கேண்டிட் படம் ஒன்றை வெளியிட்டு வாழ்த்தியுள்ளார் நடிகர் பிரபாஸ். மேலும் அவர் தனது கேப்ஷனில் தெரிவித்துள்ள வாழ்த்துக் குறிப்பில், `பிறந்த நாள் வாழ்த்துகள் பிரஷாந்த் நீல்! எப்போது மகிழ்ச்சியும், வெற்றியும் உங்களுக்குக் கிடைக்கட்டும். விரைவில் சந்திப்போம் #சலார்’ எனக் கூறியுள்ளார். இந்தப் படத்தில், பிரபாஸ், பிரஷாந்த் நீல் ஆகிய இருவரும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிகிறது.
நடிகர் பிரபாஸ்
தன் பணியின் அப்டேட்களை மட்டுமே சமூக வலைத்தளங்களில் பகிரும் நடிகர் பிரபாஸ், சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நபர் அல்ல. எனினும், தனக்கு நெருக்கமானவர்களின் பிறந்த நாள்களின் போது வாழ்த்துவது அவரின் பண்பு. நடிகர் பிரபாஸ், இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் எடுத்த படத்தைப் பதிவிட்டவுடன், அவரது ரசிகர்கள் அதனைத் தற்போது வைரலாக்கியுள்ளனர்.
`சலார்’ படத்தின் படப்பிடிப்புப் பணிகளுள் சுமார் 30 சதவிகிதம் முடிவடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் முடிவுக்குள் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, 2023ஆம் ஆண்டு கோடை விடுமுறைகளின் போது வெளியிடும் திட்டத்தில் இருக்கிறது `சலார்’ படக்குழு. இதுகுறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டூர், ``சலார்’ படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
ஒருபக்கம் இந்தியாவின் நம்பர் திரைப்படமான `பாகுபலி 2’ படத்தின் நாயகன் பிரபாஸ், மறுபக்கம், இந்தியாவின் இரண்டாவது பெரிய திரைப்படம் `கேஜிஎஃப் 2’ உருவாக்கிய பிரஷாந்த் நீல், ஹொம்பலே தயாரிப்பு நிறுவனம் ஆகியவற்றை வைத்திருக்கிறோம்.. இது பயங்கரமான காம்பினேஷன்.. எனவே இதைத் தொடர்வது கடும் சவாலான பணி. எனினும், இது ஏற்படுத்தியிருக்கும் எதிர்பார்ப்புகள் காரணமாக எங்கள் முழு உழைப்பையும் செலுத்தி வருகிறோம். `சலார்’ மூலமாக பெரும் சாதனைகளை நிகழ்த்தவுள்ளோம்’ எனக் கூறியுள்ளார்.
`சலார்’
நிழலுகத்தில் நடைபெறும் ஆக்ஷன் டிராமா கதையாக உருவாகி வரும் `சலார்’ படத்தில் நடிகர் பிரபாஸ் முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. கதாநாயகியாக ஷ்ருதி ஹாசன், சிறப்புத் தோற்றத்தில் திஷா பதானி ஆகியோர் இதில் நடித்துள்ளனர். ஹொம்பாலே ஃப்லிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் கிரகண்டூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஜெகபதி பாபு, மது குருசுவாமி, ஈஸ்வரி ராவ் முதலானோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தெலுங்கு மொழியில் உருவாக்கப்படும் இந்தத் திரைப்படம், இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும். ரவி பஸ்ரூர் இசையமைப்பாளராகவும், புவன் கௌடா ஒளிப்பதிவாளராகவும் `சலார்’ படத்தில் பணியாற்றி வருகின்றனர்.