Kamal Haasan Project K: ‘50 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்த தலைமுறையுடன் நடிக்கிறேன்’ - ப்ராஜெக்ட் கே பற்றி கமல்ஹாசன்
“எனது துறையில் எந்த ஒரு புதிய முயற்சியையும் பாராட்டிக்கொண்டே இருப்பேன். ப்ராஜெக்ட் கேவுக்கு என்னுடையது முதல் கைதட்டலாக இருக்கட்டும்” என கமல் தெரிவித்துள்ளார்.
மஹாநடி தமிழில் (நடிகையர் திலகம்), ஜாதி ரத்னலு போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் 'ப்ரொஜெக்ட் கே'(Project K). வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கும் நிலையில், நடிகர் பிரபாஸ் இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
பிரபாஸ் உடன் கமல்ஹாசன்:
பான் இந்தியா திரைப்படமாக இப்படம் உருவாகி வரும் நிலையில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, என பெரும் பாலிவுட் உச்ச நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர். இதனால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
முன்னதாக நடிகர் கமல்ஹாசன் இப்படத்தில் வில்லனான நடிக்கக்கூடும் என இணையத்தில் தகவல்கள் பரவி வந்தனர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று நடிகர் கமல்ஹாசன் பிரபாஸூக்கு வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் கமல்ஹாசன் மரோ சரித்ரா தொடங்கி பல நேரடி தெலுங்கு படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். இந்நிலையில், கமல் மீண்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அவரது டோலிவுட் ரசிகர்களையும் பிரபாஸ் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ப்ராஜெக்ட் கே-விற்கு ஆவல்:
இதுகுறித்து உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், “50 ஆண்டுகளுக்கு முன்பு நான் நடன உதவியாளராகவும், உதவி இயக்குநராகவும் இருந்தபோது தயாரிப்புத் துறையில் அஸ்வினி தத் என்ற பெயர் பெரிய அளவில் இருந்தது.
இப்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இருவரும் இணைகிறோம். நம் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஒரு சிறந்த இயக்குநர் தலைமை வகிக்கிறார். என்னுடைய சக நடிகர்களான பிரபாஸ் மற்றும் தீபிகா ஆகியோரும் அந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு முன் நான் அமித் ஜி (அமிதாப் பச்சன்) உடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் முதன்முறை போல் உணர்கிறேன். அமித் ஜி தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார். அந்தக் கண்டுபிடிப்பு முறையை நானும் பின்பற்றுகிறேன். நான் ப்ராஜெக்ட் கேவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். பார்வையாளர்கள் என்னை எந்த நிலையில் வைத்திருந்தாலும், என்னுடைய முதன்மையான குணம், நான் ஒரு திரைப்பட ஆர்வலர்.
எனது துறையில் எந்த ஒரு புதிய முயற்சியையும் பாராட்டிக்கொண்டே இருப்பேன். ப்ராஜெக்ட் கேவுக்கு என்னுடையது முதல் கைதட்டலாக இருக்கட்டும். இயக்குநர் நாக் அஸ்வினின் தொலைநோக்கு பார்வையால் நம் நாட்டிலும் சினிமா உலகிலும் கைதட்டல்கள் எதிரொலிக்கும் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: Seenu Ramasamy: 'பொதுவெளியில் சாதி பெயரை கொண்ட பாடல்களை ஒலிபரப்ப தடை செய்யுங்க' - சீனு ராமசாமி வேண்டுகோள்