Adhik Ravichandran: மீட் பண்ணக்கூட ஹீரோக்கள் டைம் தரல.. ஆதிக் ரவிச்சந்திரனுக்கு இப்படி ஒரு சோகமா?
Good Bad Ugly: குட் பேட் அக்லி படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சூழலில் ஆதிக் ரவிச்சந்திரன் தனது மோசமான காலகட்டம் குறித்து பகிர்ந்துள்ளார்.

Good Bad Ugly: தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக உலா வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த படம் வெளியான பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
சந்திக்கக்கூட நேரம் தரவில்லை:
நேர்கொண்ட பார்வை படம் பண்ணும்போது எனக்கு பெரியளவு வேலை இல்லை. அப்போது சுரேஷ் சார் மற்றும் எச்.வினோத்திடம் இருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. சாரை பார்ப்பதற்காகவே அந்த படத்திற்குள் போய்விட்டேன். சாரைப் பார்த்ததும் எனது எண்ணங்கள் மாறிவிட்டது. ஆதிக் உனக்கு நல்ல ஆற்றல் உள்ளது. இதுமாதிரி படங்கள் பண்ணாத. இதைவிட சிறப்பாக செய் என்றார்.
எனக்கு 2வது படம் சரியாக போகவில்லை. பெரிய டிசாஸ்டர் அந்த படம். நிறைய காரணங்கள் இருக்கலாம். ஆனால், இயக்குனர் நான்தான். கதாநாயகர்கள் யாருமே எனக்கு சந்திக்க நேரம் கூட அளிக்கவில்லை. நான் மட்டும் பாதிக்கப்படவில்லை.
நன்றாக மாட்டிக்கொண்டேன்:
எங்க அம்மா, எங்க அப்பா, என் தம்பி நிதிநிலையா பயங்கரமா அடி வாங்கிட்டோம். நம்ம படம் சரியாக போகாத காரணத்தால் வீட்டில் பயந்துட்டாங்க. 2023 வரை எனக்கு ரிலீஸ் இல்லை. வேலை இல்லை. எங்க அப்பாவும் உதவி இயக்குனராக 25 வருடங்கள் இருந்தார். என்னுடனும் இணை இயக்குனராக வேலை பார்த்துள்ளார்.
நான் வேலை செய்தால்தான் எங்க அப்பாவிற்கு வேலை. நாங்க இரண்டு பேரும் வேலை செய்தால்தான் வீடு இயங்கும். அப்படி ஒரு காலத்தில் மிகவும் டைட்டாக மாட்டிக்கொண்டோம். அது ரொம்ப கஷ்டம்தான் சார். இப்போது நினைத்தாலும் எப்படி தாண்டி வந்தோம் என்று தெரியவில்லை. எங்கம்மா நான் சினிமாவில் போய்விடக்கூடாது என்று தினமும் கடவுளிடம் வேண்டுவார். ஆனால் நான் இயக்குனர் ஆகிவிட்டேன். என் தம்பி ஜிவி பிரகாஷிடம் உதவியாளராக இசையில் பணியாற்றி வருகிறான்.
அஜித் சொன்ன வார்த்தை:
அப்படி இருந்த நேரத்தில் அஜித் சார் நாம் படம் பண்ணுகிறோம் 2018ம் ஆண்டு சொன்னார். நான் அப்போது ஜீரோ கூட இல்லை. மைனசில் இருந்தேன். போனி கபூர் சார்கிட்ட ஆதிக் நடிகர் இல்லை. அவர் இயக்குனர்.
என் வார்த்தையை நோட் பண்ணிக்கோங்க. அவர் பெரிய ஆளா வருவாரு. எனக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. இதை நான் படப்பிடிப்பில் கூட கேட்டேன். அப்போ சொன்னீங்களே எப்படி சார் யோசிச்சீங்க? என்றேன். சிரிச்சுகிட்டே போயிட்டாரு. அவரு மத்தவங்களை எப்படி பாக்குறாருனு தெரியல.
மார்க் ஆண்டனி வெளியீட்டிற்கு முன்பு அஜித் சார் கால் பண்ணாரு. ஆதிக் உங்க படம் 100 கோடி வசூல் பண்ணும்னு சொன்னாரு. நான் தயாரிப்பாளருக்கு குறைந்தபட்சமாவது லாபம் கொடுத்துடு கடவுளேனு வேண்டுனா தயாரிப்பாளர் இதை சொல்றாரு. உண்மையிலே அந்த படம் அதை பண்ணுச்சு.
இவ்வாறு அவர் கூறினார்.
குட் பேட் அக்லி படம் தற்போது ரிலீசாகி உலகெங்கும் 150 கோடிக்கும் மேல் வசூலை குவித்துள்ளது. தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளாகவும் ஓடிக் கொண்டிருக்கிறது.





















