Vijay Yesudas: விஜய் யேசுதாஸ் வீட்டில் நகை திருட்டு விவகாரம்... பொய் புகாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை...
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகை திருட்டு போன விவகாரத்தில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இது பொய் புகாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான பாடகரான யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் கூட பிரபலமான பாடகராகவும், நடிகராகவும் இருந்து வருகிறார். சென்னையில் உள்ள அபிராமிபுரத்தில் தனது மனைவி தர்ஷனா மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது வீட்டில் 60 சவரன் தங்க நகை மற்றும் வைர நகைகள் திருட்டு போனதாக அவரது மனைவி மார்ச் 30ம் தேதி அபிராமபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். மேலும் அவர்கள் வீட்டில் பணிபுரியும் மேனகா மற்றும் பெருமாள் உள்ளிட்டோரின் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார் தர்ஷனா.
தொடர் திருட்டு :
நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போலீசார் அவர்கள் வீட்டில் பணிபுரிந்த அனைத்து ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளையும் பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்றது.
போலீசார் குழப்பம் :
விஜய் யேசுதாஸ் மனைவி புகார் அளிக்கையில் அவர் டிசம்பர் மாதம் 2ம் தேதி கடைசியாக நகைகளை பார்த்ததாகவும், பின்னர் பிப்ரவரி மாதம் பார்க்கையில் அவற்றை காணவில்லை என்றும் கூறியுள்ளார். பாதுகாப்பாக நகைகள் நம்பர் லாக்கரில் வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதன் பாஸ்வர்ட் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவிக்கு மட்டுமே தெரியும். லாக்கர் உடைப்படவில்லை அதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொண்டது போலவும் தெரியவில்லை. அப்படி இருக்கையில் நகைகள் எப்படி திருட்டு போனது என்பது போலீசாருக்கு குழப்பமாக இருந்தது.
பொய் புகாரா என்ற கோணத்தில் விசாரணை :
மேலும் நகைகள் காணாமல் போன 40 நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்தது சந்தேகத்தைக் கொடுத்தது. போலீசாரின் விசாரணையில் வீட்டின் ஊழியர்கள் திருடவில்லை என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அடுத்த கட்ட விசாரணையின் போது விஜய் யேசுதாஸ் குடும்பத்தினர் சரியாக பதிலளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. பலமுறை தொடர்பு கொண்டும் பாடகர் விஜய் யேசுதாஸும் வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை என சொல்லப்படுவதால் இதனால் பொய் புகார் அளிக்கப்பட்டதா? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதனால் விஜய் யேசுதாஸ் குடும்பத்தாரை மீண்டும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர் போலீசார். இந்த செய்தி திரையுலகத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி சோசியல் மீடியாவில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.