Jailer: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா பணியில் விபத்து - 15 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்காக நேரு ஸ்டேடியத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததால் பரபரப்பு
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்காக நேரு ஸ்டேடியத்தில் அலங்கார விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளி 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினி, தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் ஜெயிலர் படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க, அனிரூத் இசை அமைத்து இருக்கிறார். படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் படம் திரைக்கு வருகிறது.
நாளை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்கும் 500 பேருக்கு இலவச டிக்கெட்டுகளை படக்குழு வழங்கி இருந்தது. பிரமாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி, மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராஃப், சுனில் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்கின்றனர். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்த ரஜினி, சென்னை திரும்பிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கில் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இசை நிகழ்ச்சிக்காக நேரு விளையாட்டு அரங்கை அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அலங்கார விளக்குகளை அமைக்கும் பணியில் ஈடுபட்ட ஊழியர் ஒருவர் மீது மின்சாரம் தாக்கியதாகவும், அவர் 15 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சங்கர் மாலா என்பதும், அவருக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. நேற்றிரவு நடந்த இந்த விபத்து குறித்து பெரியமேடு போலீசார் விசராணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக தமன்னாவின் அசத்தல் நடத்தில் வெளியான ஜெயிலர் படத்தின் காவலா பாடலும், ரஜினியின் மாஸ் வசனத்தில் வெளியான ஹூக்கும் பாடலும் மாஸ் ஹிட்டாக இணையத்தில் டிரெண்டாகியது. அந்த வரிசையில் நேற்று மாலை ஜெயிலர் படத்தின் 3வது பாடலை படக்குழு வெளியிட்டது. ‘ஜுஜுபி’ என்ற பெயரில் ரத்தமும், சதையுமாக வெளியான 3 நிமிட பாடல் வரிகள் ரஜினியின் அதிரடி ஆக்ஷனை காட்டியுள்ளது. அனிரூத் இசையில் சூப்பர் சுப்பு வரிகளை பாடகி தீ தனக்கே உரிய பாணியில் பாடி அசத்தி உள்ளார்.