13 years of Inidhu Inidhu : கலர்புல்லான கல்லூரி வாழ்க்கையின் மெமரிஸ்... அரிதாக வந்து 'இனிது இனிது' ..13 ஆண்டுகள் நிறைவு
கலகலப்பான கல்லூரி வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய 'இனிது இனிது' திரைப்படம் வெளியான நாள்.
தமிழ் சினிமா கலர்கலரான எத்தனையோ கல்லூரி கதைகளை கடந்து வந்துள்ளது. அந்த வகையில் கலகலப்பான கலர்புல்லான ஒரு காலேஜ் கலாட்டா உடன் காதலும் இணைத்த ஒரு திரைப்படம் தான் 2010ம் ஆண்டு வெளியான 'இனிது இனிது' திரைப்படம். 2007ல் தெலுங்கில் 'ஹேப்பி டேஸ்' என்ற பெயரில் வெளியான திரைப்படத்தின் தமிழ் ரீமேக் தான் 'இனிது இனிது'. இந்த எவர்க்ரீன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 13 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
கல்லூரி காலம் :
பணக்கார வீட்டு பசங்க மட்டுமே படிக்கும் மிகவும் அல்ட்ரா மாடர்ன் கல்லூரியில் வந்து முதலாம் ஆண்டில் சேரும் மாணவர்கள் வழக்கமாக சந்திக்கும் ராகிங், காதல், க்ரஷ், ப்ரெண்ட்ஷிப், சண்டை, மோதல் உள்ளிட்ட விஷயங்களை மிகவும் ஜாலியாக கொடுத்து இருந்தார் இயக்குனர் கே.வி. குகன். கல்லூரியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனும் தன்னுடைய வாழ்க்கையோடு ரிலேட் செய்யும் அளவுக்கு எதார்த்தமான ஒரு கல்லூரி வாழ்க்கையை காட்சிப்படுத்தியது இப்படம்.
மாணவர்களின் ரகம் :
சீனியர் மாணவர் என்றாலே கெத்து என முதலாம் ஆண்டு மாணவர்களை ராகிங் என்ற பெயரில் வகைவகையாக சேட்டை செய்வது கல்லூரிக்கே உரித்தான ஒரு அம்சம். விதவிதமான மாணவர்களை கல்லூரியில் பார்க்கலாம். ராகிங் செய்யும் போது பொறுத்து கொண்ட ஹீரோ அதே சீனியர் தனது காதலிக்காக வெளுத்து வாங்குவது ஒரு ரகம் என்றால் காலேஜ் புரொபசரையே ஒன் சைடாக சைட் அடிக்கும் மாணவர் ஒரு ரகம்.
அழகான திரைக்கதை :
அதிக், நாராயணன், விமல், சரண், ரேஷ்மி, சோனியா, பெனாஸ், ஷியா உமர் என நான்கு மாணவர்கள் நான்கு மாணவிகள் இடையே இருக்கும் ப்ரெண்ட்ஷிப், காதல் இவற்றை மட்டுமே காட்டி போரடிக்காமல் சென்டிமெண்டையும் உள்ளே நுழைத்து மாணவர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஆடியன்ஸும் ரசிக்கும்படி அழகாவும், அற்புதமாகவும் திரைக்கதையை அமைத்து இருந்தார் இயக்குனர் கே.வி. குகன்.
கல்லூரி வாழ்க்கை என்றால் அது எப்படி இருக்கும் என்ற பிம்பத்தை மாணவனுக்கு கொடுத்த ஒரு படம். இப்படத்தை ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் பார்வையாளர்களை கடந்த காலத்திற்கு அழைத்து சென்று நண்பர்களோடு தொடர்புபடுத்தி ரசிக்க வைக்கும்.
எத்தனை காலங்கள் கடந்தாலும் கல்லூரி வாழ்க்கை என்பது நினைவில் இருந்து நீங்காது. அந்த நினைவுகளை புதுப்பித்த சில திரைப்படங்களும் ஞாபகங்களில் இருந்து மறையாது. அப்படி அரிதாக பூத்த ஒரு ஜாலியான திரைப்படம் தான் இனிது இனிது.