11 years of Kalakalapu: திரையரங்குகளில் ஓயாத சிரிப்பு மழை..! எவர்கிரீன் காமெடி ட்ரீட் 'கலகலப்பு' 11 ஆண்டுகள் நிறைவு..!
சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பாக வெளியான கலகலப்பு திரைப்படம் இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
சினிமா என்பது நமது மனதிற்கு இதம் தரக்கூடியதாக, கவனத்தை திசை திருப்பாமல் இரண்டரை மணி நேரம் கட்டிப் போடக்கூடிய பொழுதுபோக்காக அமைய வேண்டும். அப்படி படம் முழுக்க நகைச்சுவை காட்சிகளை வரிசைகட்டி ரசிகர்களை கலகலப்பாக்கிய இயக்குனர் சுந்தர்.சியின் அற்புதமான படைப்புகளில் ஒன்று 'கலகலப்பு' திரைப்படம். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் இன்றுடன் 11 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
கம்ப்ளீட் நகைச்சுவை படம் :
விமல், சிவா, ஓவியா , அஞ்சலி, இளவரசு,ஜான் விஜய், சந்தானம் என ஏராளமானோர் நடித்த இப்படத்தில் காமெடிக்கு பஞ்சமேயில்லை. படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வாய் விட்டு வயிறு வலிக்க சிரிக்கும் அளவுக்கு நகைச்சுவை கொட்டி கிடந்தது. படத்தின் நடிகர்கள் மட்டுமல்ல அப்படத்தில் விமல் வளர்த்த நாய் கூட அப்லாஸ் அள்ளியது. எத்தனை முறை பார்த்தாலும் மனம் லயித்து ரசிக்க கூடிய படங்களின் வரிசையில் நிச்சயம் கலகலப்பு இடம்பெறும்.
சுந்தர்.சியின் தனி ட்ராக் :
கருத்து சொல்லும் படங்கள் தான் இன்றைய ட்ரெண்டாக உள்ளது. அப்படி இருக்கையில் திரையரங்குக்கு வருபவர்களை வாய்விட்டு சிரிக்க வைக்கும் நோக்கத்தில் படங்கள் எடுப்பதில் முக்கியமான இயக்குனராக விளங்கியவர் இயக்குனர் சுந்தர்.சி. நகைச்சுவை காட்சிகள் என தனியாக இல்லாமல், இரட்டை அர்த்தங்கள் இல்லாமல் படத்தின் திரைக்கதையுடன் ஒன்றிப் போகும் காமெடிகளை கொடுப்பதில் சுந்தர். சி கெட்டிக்காரர் என்பதை பலமுறை நிரூபித்துள்ளார்.
சூப்பர் ஹிட் டூ சுமார் :
உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், நாம் இருவர் நமக்கு இருவர், ஜானகிராமன், வின்னர், அன்பே சிவம், அரண்மனை என ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த சுந்தர்.சி திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடிக்க துவங்கினார். கலகலப்பான படங்களை கொடுத்த சுந்தர்.சி கிராப் கலகலப்பு படத்திற்கு பிறகு சரிய துவங்கியது. சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்த வந்த சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு படத்திற்கு பிறகு சுமார் பட கேட்டகிரியை தான் பெற்றது.
அரண்மனை 4 :
திரில்லர் ஜானரில் சுந்தர்.சி அடுத்தடுத்து அரண்மனை படங்களில் அடுத்தடுத்த பாகங்களை எடுத்து வருகிறார். அரண்மனை முதல் பாகத்திற்கு கிடைத்து வரவேற்பு அடுத்தடுத்த பாகங்களுக்கு பெரிய அளவில் கிடைக்கவில்லை. தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கி வருகிறார். இது ரசிகர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரண்மனைக்கு இல்லையா ஒரு எண்டு என புலம்பி வருகிறார்கள்.
சுந்தர்.சியின் கலகலப்பான நகைச்சுவை படங்களை பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சீக்கிரமா ஒரு கம்பேக் திரைப்படத்தை கொடுங்க பாஸ் என அவரிடம் வேண்டுகோள் வைக்கிறார்கள் அவரின் ரசிகர்கள்.