இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? ஜூன் 4-ம் தேதி பிற்பகலில் தெரியவரும்
ஜூன் 4-ம் தேதி பிற்பகலில் இந்தியாவை அடுத்து ஆளப்போவது எந்தக்கூட்டணி, அடுத்த பிரதமர் யார் என்பது தெரிந்துவிடும்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய துணைக் கண்டத்தின் தேர்தல், அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்குகிறது. 19-ம் தேதி தொடங்கும் முதற்கட்டத் தேர்தல் ஜூன் 1-ம் தேதி 7வது கட்டத்துடன் நிறைவு பெறுகிறது. ஜூன் 4-ம் தேதி பிற்பகலில் இந்தியாவை அடுத்து ஆளப்போவது எந்தக்கூட்டணி, அடுத்த பிரதமர் யார் என்பது தெரியவரும் .
மாபெரும் நிகழ்வு:
18-வது மக்களவை ( தமிழில்) என அழைக்கப்படும் லோக் சபா (இந்தியில்) வை தேர்வு செய்வதற்காக, 96.8 கோடி வாக்காளர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை என்பது, அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியோ போன்ற கண்டங்களின் மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கையை, இந்தத் தேர்தல் எவ்வளவு பெரியது என்பதைச் சுட்டிக்காட்டும்.
இந்தத் தேர்தலுக்காக, தேர்தல் நடத்தும் அலுவலர்கள், பாதுகாவலர்கள் என 1.5 கோடி பேர் பணி செய்யவுள்ளனர். 55 லட்சம் வாக்குபதிவு எந்திரங்கள் எனும் ஈவிஎம்-கள் நாடு முழுவதும் பயன்படுத்தப்படவுள்ளன. இதற்காக, இந்தியா முழுவதும் 10.5 லட்சம் வாக்கு சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இன்று முதல் நாட்டை “ஆளும்” தேர்தல் ஆணையம்:
நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதால், நாட்டின் அனைத்து நிகழ்வுகள் இந்திய தேர்தல் ஆணையம் கண்காணித்து, உத்தரவுகளைப் பிறப்பித்து வரும். ஆணையத்தின் உத்தரவின்றி பெரிய நிகழ்வுகள், புதிய நிகழ்வுகள் ஏதும் நடைபெறாது. தேர்தல் முடிந்தது, அடுத்த அரசு தேர்வு செய்யப்படும் வரை, அதாவது, ஜூன் 4-ம் தேதி வரை தேர்தல் ஆணையம்தான் இந்தியாவை கிட்டத்தட்ட ஆட்சி செய்யும் என்றால் மிகையில்லை.
இளைய சக்திக்கு முக்கியத்துவம்:
இந்தத் தேர்தலில், 100 வயதைக் கடந்தவர்கள் 2.18 லட்சம் பேரும் 80 வயதைக் கடந்தவர்கள் 82 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர். ஆனால், இந்தத் தேர்தலில் முதல்முறை வாக்காளர்களாக 1.8 கோடி பேர் தகுதிப் பெற்றுள்ளனர். ஆனால், 29 வயதுக்கு உட்பட்ட இளைய வாக்காளர்கள் எண்ணிக்கை என்பது 19.74 கோடி பேர். அதாவது, இந்தத் தேர்தலில் கிட்டத்தட்ட 20 சதவீதம் வாக்காளர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள பெண்கள் எண்ணிக்கை என்பது 47.1 கோடி என்பது மிகப்பெரிய அளவு.
4 “எம்”-களை ஒழிப்பது முக்கிய நோக்கம்:
இந்தத் தேர்தலை பொறுத்தமட்டில், பணம் (Money), ஆள் பலம்(Muscle), தவறான தகவல் பரப்புதல் (Mis Information), தேர்தல் நடத்தை விதிகளை மீறுதல் (MCC violation) ஆகிய நான்கை ஒழிப்பது தேர்தல் ஆணையத்தின் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என்று இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். இந்த நான்கை சரிவர கட்டுப்படுத்தி செயல்படுத்தினாலே, நேர்மையாகவும் ஒளிவுமறைவின்றியும் தேர்தல் நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளது.
21 ஆயிரம் கண்காணிப்பாளர்கள்:
543 உறுப்பினர்களைத் தேர்வு செய்தவற்காக நடைபெறும் உலகின் இந்த மிகப்பெரிய திருவிழாவை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் 21 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்தலில், குழந்தைகள் எந்தவிதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்பதுடன் மாற்றுத்திறனாளிகளைத் தரக்குறைவாக பேசுவதும் தடை செய்யப்படுகிறது. மேலும், தேர்தல் தொடர்பாக அனைத்துவித புகார்களையும் உடனுக்குடன் தெரிவிப்பதற்கா,சி விஜில் செயலியில் தெரிவிக்கலாம். எனவே, இவை அனைத்தையும் கண்காணித்து, தேர்தல் நேர்மையாக நடைபெறுவதை பல்லாயிரக்கணக்கான தேர்தல் அதிகாரிகளும் கண்காணிப்பாளர்களும் உறுதி செய்வார்கள்.
கவுண்ட் டவுன் தொடங்கியது:
46 நாட்களில் 7 கட்டத் தேர்தல் நடத்துவது என்பது சாதாரண விடயமல்ல. எனவே, அடுத்த பிரதமரைத் தேர்வு செய்வதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. தேர்தல் என்பது மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்பதால், வரும் ஜூன் 4-ம் தேதி வரை விறுவிறுப்புகளுக்கும் பரபரப்புகளுக்கும் கொஞ்சம் கூட குறைவிருக்காது என்பது உறுதி.