தவிப்பில் தமிழ்நாடு.. தவெகவுக்கு விசிக ஆதரவு? முதலமைச்சராகும் திருமாவளவன்? வன்னியரசு பேட்டி!
திருமாவளவனை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று கூறப்படுகிறது குறித்துக் கேள்வி கேட்கிறீர்கள். அவர் முதலமைச்சராகவும் வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன்- வன்னியரசு

தமிழ்நாடு நலன்தான் விடுதலை சிறுத்தைகளின் கருத்தாக இருக்கும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான வன்னியரசு தெரிவித்துள்ளார்.
மக்கள் ஆட்சிதான் தொடர வேண்டும் அமைய வேண்டும் என விரும்புகிறோம். ஆளுநர் செயல்பாடுகள் எல்லாமே அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் வன்னியரசு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எடுக்கும் முடிவு தான். அவர் எடுக்கும் முடிவு எங்களது நிலைப்பாடு.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முடிவுக்கு மக்கள் சரியான தருணமாக தந்து இருப்பதாக பார்க்கிறேன். தமிழ்நாடு நலனுக்காக உரிமைகளுக்காக விடுதலை சிறுத்தைகள் எப்போதும் நிற்கும். உயர்நிலைக் கூட்டத்தில் தலைவர் திருமா முக்கிய முடிவை எடுத்து உள்ளார்.
தனிப்பட்ட கருத்து இல்லை
இதில் தனிப்பட்ட கருத்து எதுவும் இல்லை. கட்சியின் கருத்து தலைவரின் கருத்துதான். தமிழ்நாட்டின் நலன் என்ற கருத்துதான். தனிப்பட்ட முறையில் யாரையும் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சசித்தது இல்லை. அரசியல் ரீதியான விமர்சனம் தான்.
ஆளுநரையும் ஆளுநர் ஆட்சியையும் ஏற்று கொள்வதில்லை. மக்கள் ஆட்சி தான் தொடர வேண்டும், அமைய வேண்டும் என விரும்புகிறாகள். ஆளுநர் செயல்பாடுகள் எல்லாமே அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக உள்ளன. சமூக வலைதளத்தில் பரவும் செய்திகள் குறித்து எதுவும் எனக்குத் தெரியவில்லை.
விஜயை அழைக்க வேண்டும்
விஜயை அழைக்க வேண்டும். பெரும்பான்மையான இடங்களை கொண்டவரை அழைக்க வேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள உரிமை.
திருமாவளவனை துணை முதலமைச்சராக்க வேண்டும் என்று கூறப்படுகிறது குறித்துக் கேள்வி கேட்கிறீர்கள். அவர் முதலமைச்சராகவும் வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து தலைவர் அறிவிப்பார்''.
இவ்வாறு வன்னியரசு தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்




















