Tamilisai Assets: 200 பவுன் நகை, கையிருப்பு: முன்னாள் ஆளுநர், தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சொத்து மதிப்பு இவ்வளவா?
Sounth Chennai BJP Candidate Tamilisai Assets: தமிழிசையிடம் 200 பவுன் தங்க நகைகள் உள்ளன. 10 லட்ச ரூபாய் மதிப்பில் மருத்துவ ஆய்வகமும் 10 லட்ச ரூபாய் மதிப்பில் ஸ்கேனிங் பிரிவும் உள்ளன.
புதுச்சேரி, தெலங்கானா ஆகிய இரண்டுக்குமே ஆளுநராக இருந்தவர் தமிழிசை செளந்தர்ராஜன். தமிழ்நாட்டி போட்டியிடுவதற்காகவே ஆளுநர் பதவியைத் துறந்து சென்னை திரும்பினார். அடிப்படையில் மகப்பேறு மருத்துவரான தமிழிசை, தமிழக பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போது தென் சென்னை தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராகக் களமிறங்குகிறார். இந்த நிலையில் அவர் பெயரிலும் அவரின் கணவர் செளந்தர்ராஜன் பெயரிலும் உள்ள சொத்து மதிப்பு எவ்வளவு? பார்க்கலாம்.
தமிழிசை பெயரில் அசையும் சொத்து 1.57 கோடி ரூபாயும், அசையா சொத்து 60 லட்ச ரூபாயும் உள்ளது. அவரது கணவர் செளந்தர்ராஜன் பெயரில் 3 கோடியே 92 லட்சத்து ஆயிரத்து 426 ரூபாய் அசையும் சொத்தும், 13 கோடியே 70 லட்ச ரூபாய் அசையா சொத்தும் உள்ளது.
தமிழிசைக்குக் கடனாக ரூ.58.5 லட்சம் உள்ளது. அவரின் கணவர் செளந்தர்ராஜனிடம் ரூ.3.35 கோடி கடன் இருக்கிறது.
வழக்குகள் எதுவுமில்லை
தமிழிசை மீது எந்த வழக்குகளும் இல்லை. அவர் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவும் இல்லை.
கையிருப்பு
தமிழிசை மற்றும் அவரின் கணவர் செளந்தர்ராஜன் ஆகிய இருவரும் தலா ரூ.50 ஆயிரம் பணத்தைக் கையில் ரொக்கமாக வைத்துள்ளனர்.
4 கார்கள்
தமிழிசையிடம் சொந்தமாக வாகனம் எதுவும் இல்லை. எனினும் அவரின் கணவரிடம் 25 லட்ச ரூபாய் மதிப்பில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் உள்ளது. அதேபோல 15 லட்ச ரூபாய் மதிப்பில் ஃபோர்ஸ் எஸ்யூவி கார் உள்ளது. இந்த 2 கார்களுடன் 16 லட்ச ரூபாய் மதிப்பில் டெம்போ டிராவலரும் 3 லட்ச ரூபாய் மதிப்பில் கிரெட்டா காரும் இவர்கள் வசம் உள்ளன.
200 பவுன் தங்க நகைகள்
தமிழிசையிடம் 200 பவுன் தங்க நகைகள் உள்ளன. 10 லட்ச ரூபாய் மதிப்பில் மருத்துவ ஆய்வகமும் 10 லட்ச ரூபாய் மதிப்பில் ஸ்கேனிங் பிரிவும் தமிழிசையிடம் உள்ளன. எனினும் அவரின் கணவரிடம் எந்த நகைகளும் இல்லை.
அதே நேரத்தில் தமிழிசை பெயரில் நிலங்கள், கடைகள், வணிக கட்டிடங்கள் உள்ளிட்ட சொத்துகள் எதுவும் இல்லை. எனினும் அவர் கணவர் பெயரில் நிலங்கள் உள்ளன. 6.37 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலம் உள்ள நிலையில், விவசாயம் அல்லாத நிலமும் அவர் வசம் உள்ளது. (1343 சதுர அடிகள்) அதேபோல தமிழிசை, செளந்தராஜன் ஆகிய இருவர் பெயரிலும் வீட்டுக் குடியிருப்பு கட்டிடங்கள் உள்ளன.
வருவாய் ஆதாரம் என்ன?
வருவாய்க்கான ஆதாரமாக தன்னுடைய மருத்துவத் துறை மற்றும் தன் கணவரின் மருத்துவத் தொழிலையும் தமிழிசை குறிப்பிட்டு உள்ளார். இந்த தகவல்களை வேட்பு மனுத்தாக்கல் செய்த போது அளித்த பிரமாணப் பத்திரத்தில் தமிழிசை தெரிவித்துள்ளார்.
தென் சென்னை தொகுதியில், திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் ஆகியோரை எதிர்த்து தமிழிசை களம் காண்பது குறிப்பிடத்தக்கது.