Coimbatore Election Results: கோவையில் சொல்லி அடித்த திமுக; அண்ணாமலைக்கு எதிராக பிரமாண்ட வெற்றியை சாத்தியப்படுத்தியது எப்படி?
Coimbatore Lok Sabha Election Result 2024: நட்சத்திர அந்தஸ்தும், பலம் வாய்ந்த வேட்பாளராக கருதப்பட்ட அண்ணாமலையை 1 இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை திமுக பெற்றுள்ளது.
28 ஆண்டுகளுக்கு பிறகு கோவை மக்களவை தொகுதியை திமுக கைப்பற்றி இருப்பது, அக்கட்சியினர் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1980, 1996 ஆகிய ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த தேர்தலில் கோவை தொகுதியை திமுக நேரடியாக கைப்பற்றியுள்ளது. அதிலும் நட்சத்திர அந்தஸ்தும், பலம் வாய்ந்த வேட்பாளராக கருதப்பட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை 1 இலட்சத்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை திமுக பெற்றுள்ளது.
அனைத்திலும் முன்னிலை பெற்ற திமுக
வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதல் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்தார். பாஜக மாநிலத் தலைவர் தொடர்ந்து பின்னடைவு சந்தித்து வந்தார். சில சுற்றுகளில் திமுகவை விட கூடுதலாக வாக்குகளை பெற்றாலும், அவரால் இறுதிவரை ஒட்டுமொத்தமாக முன்னிலை பெற முடியவில்லை. அனைத்து சுற்றுகளிலும் கணபதி ராஜ்குமார் கணிசமான வாக்குகள் முன்னிலை பெற்று வந்தார். அரசு ஊழியர்கள் மற்றும் 85 வயதிற்கும் மேற்பட்ட முதியவர்கள் கணிசமாக வாக்கு அளித்தால், முதல் சுற்று தபால் வாக்குகளில் அண்ணாமலை முன்னிலை பெற்றாலும், இறுதியில் கணபதி ராஜ்குமாரே அதிலும் முன்னிலை பெற்று அசத்தினார். இதனால் வாக்கு எண்ணிக்கையின் அனைத்து வகையிலும் கணபதி ராஜ்குமார், அண்ணாமலையை பின்னுக்கு தள்ளி அசத்தினார்.
இறுதியாக 24 சுற்றுகள் மற்றும் தபால் வாக்குகள் சேர்த்து கோவை மக்களவை தொகுதியில் 1 இலட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் பிரமாண்ட வெற்றி பெற்றார். திமுக 568200 வாக்குகளும், பாஜக 450132 வாக்குகளும், அதிமுக 236490 வாக்குகளும், நாதக 82657 வாக்குகளும் பெற்றன. கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும் வென்ற, அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
திட்டமிடலுடன் களமாடிய திமுக
கோவை தொகுதியை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றியே தீர வேண்டுமென்ற முனைப்புடன் நாடாளுமன்ற தேர்தலில் திமுக களமிறங்கியது. வேட்பாளர் தேர்வு முதல் இறுதிக் கட்ட தேர்தல் பரப்புரை வரை அனைத்தையும் முறையான திட்டமிடலுடன் செய்தது. சர்ச்சை இல்லாத படித்தவரும், மேயராக மக்களுக்கு அறிமுகமானவருமான கணபதி ராஜ்குமார் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். செந்தில் பாலாஜி சிறைக்கு சென்ற நிலையில், முத்துசாமி கோவையின் பொறுப்பு அமைச்சராக இருந்து வருகிறார். முத்துசாமி மென்மையான போக்கை கடைபிடித்து வந்த நிலையில், அதிரடியான செயல்பாடுகளை கொண்ட டிஆர்பி ராஜா தேர்தலுக்கு பொறுப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலை போட்டியிடுவதால் தொழில் துறையினர் ஆதரவு பாஜகவிற்கு செல்வதை தடுக்கும் வகையில் தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜாவிற்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அவரது தலைமையின் கீழ் உள்ள ஐடி விங்க் ட்ரெண்டிங்கிற்கு ஏற்ப பாஜக எதிர்ப்பை சமூக வலைதளங்களில் முன்னிறுத்தியது.
திமுக சட்டமன்ற தொகுதி வாரியாக பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு பூத் கமிட்டி அமைத்தது. தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் மூலம் தொகுதியின் அனைத்து கள நிலவரங்களையும் அறிந்து கொள்வதற்கும், ஆலோசனை வழங்குவதற்கும் ஏதுவாக ’வார் ரூம்’ செயல்படுத்தப்பட்டது. இதற்காக கோவை வடக்கில் 22, கோவை தெற்கில் 11, சிங்காநல்லூரில் 21, பல்லடத்தில் 32, சூலூரில் 29, கவுண்டம்பாளையத்தில் 63 அலுவலகங்கள் அமைக்கப்பட்டன. கோவை தொகுதியில் திமுக பலவீனமாக உள்ள பகுதிகளைக் கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, கட்சி கட்டமைப்பை மேம்படுத்துதல், வாக்காளர்களின் ஆதரவை பெறுதல் உள்ளிட்ட பணிகளை திமுகவினர் தீவிரமாக மேற்கொண்டனர்.
திமுக ஆட்சியின் சாதனைகளை எடுத்துரைத்தும், பாஜக ஆட்சியை விமர்சனம் செய்தும் திமுகவினர் பரப்புரை செய்தனர். அதேசமயம் திமுகவின் வேட்பாளர் முதல் முதலமைச்சர் வரை அண்ணாமலைக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பாஜக எதிர்ப்பு என்பதை மட்டும் முன்னிலைப்படுத்தி தேர்தல் பரப்புரை செய்தனர். இறுதி நாள் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழுமையாக கோவை தொகுதியில் பரப்புரை செய்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி இல்லாமல் கோவையில் திமுக பிரமாண்ட வெற்றி பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.