Tamil Nadu Election 2024: தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் தங்கள் வாக்கை பதிவு செய்த அரசியல் கட்சி வேட்பாளர்கள்
தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் வாக்குகளை பதிவு செய்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் வாக்குகளை பதிவு செய்து தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு
தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கியது. தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் மன்னார்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் அடங்கியுள்ளது.
இதில் 7,27,166 ஆண் வாக்காளர்களும், 7,73,932 பெண் வாக்காளர்கள், 128 மூன்றாம் பாலினம் வாக்காளர்கள் என மொத்தமாக 15,01,226 வாக்காளர்கள் உள்ளனர்.
தஞ்சை சட்டமன்றத் தொகுதியில் 292 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருவையாறு தொகுதியில் 314, ஒரத்தநாடு தொகுதியில் 287, பட்டுக்கோட்டை தொகுதியில் 272, பேராவூரணி தொகுதியில் 260, மன்னார்குடி தொகுதியில் 285 என மொத்தமாக 1,710 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் நேற்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தஞ்சாவூர் எம்.பி., எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தனது வாக்கை சீனிவாசபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார். இதேபோல் தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தனது வாக்கை மருத்துவக்கல்லூரி சாலை கூட்டுறவு காலனியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குப்பதிவு மையத்தில் பதிவு செய்தார். நாம் தமிழர் கட்சி தஞ்சை தொகுதி வேட்பாளர் நாம் தமிழர் கட்சி தஞ்சை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஹிமாயூன் கபூர் தனது வாக்கை யாகப்பா நகர் பகுதியில் உள்ள வாக்குப்பதிவு மையத்தில் பதிவு செய்தார்.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் என்.செந்தில்குமார் காவலூர் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். தஞ்சாவூர் எம்எல்ஏ டி கே ஜி நீலமேகம் தனது வாக்கினை வடக்கு வீதியில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் பள்ளி மையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் கண்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்களித்தார். இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி தனது மனைவி பொற்செல்வியுடன் வந்து தென்னங்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்கு மையத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
முதல் தலைமுறை வாக்காளர்
தஞ்சை மானம்புச்சாவடி பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடி மையத்தில் தஞ்சை சவிதா ஸ்ரீ தனது முதல் வாக்கை பதிவு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், எனது மனதில் ஒருவரை நினைத்து அவருக்கு வாக்கு போட உள்ளேன். வெற்றி பெற்று வருபவர் மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெற்று மேற்படிப்புக்காக வெளிநாடு செல்வதாக இருந்தாலும் அவர்களுக்கு உதவ வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தம், சுகாதாரம் வேண்டும். முதல்வாக்கை பதிவு செய்யும் வரை சற்றே படபடப்பு இருந்தது. எனது ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மகிழ்ச்சியும் இருந்தது என்றார்.
இதேபோல் தஞ்சை மாவட்டம் தென்னங்குடியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முரசொலியின் அண்ணன் மகள் அனு யாழினி தனது முதல் வாக்கினை பதிவு செய்தார்.