Tamil Nadu Election 2024: கோவையில் காணாமல் போன 1 லட்சம் வாக்காளர்கள் - அண்ணாமலையின் புகாரால் பரபரப்பு
ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பில் உரிய முனைப்பும் நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கோவை மாவட்டத்தில் உள்ள கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதல் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவரும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை ராம் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்று பெரும் வாக்குப்பதிவினை நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அண்ணாமலை, “கோயம்புத்தூர் பகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வாக்களிப்பதற்காக ஆர்வமாக இங்கு வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் மீது புகார்
கணவருக்கு ஒரு வாக்கு சாவடி, மனைவிக்கு மற்றொரு வாக்குச்சாவடி மையத்திலும் ஒதுக்கப்பட்டுள்ளது. கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் தயாரிப்பில் உரிய முனைப்பும் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை இது காட்டுகிறது. ஒரு பாராளுமன்ற தொகுதியின் ஒரே இடத்தில் இருந்து 830 வாக்காளர்களின் பெயர்கள் எந்த அடிப்படையில் நீக்கப்பட்டு உள்ளது என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இந்த வாக்கு சாவடி மையத்தில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். பாஜக சார்பில் இதற்கான போராட்டமும் தீர்வையும் தேடி வருகிறோம். இருந்தும் மக்கள் உற்சாகமாக தங்களது வாக்களிக்கும் உரிமையை செய்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையம் முதியோர்களுக்கான போக்குவரத்து வாகன ஏற்பாடு செய்வதிலும் சுணக்கம் காட்டியுள்ளது. இருந்தும் மக்கள் அதிக அளவில் வந்து வாக்களித்து வருகின்றனர். கோயம்புத்தூர் பாராளுமன்ற தொகுதியில் 75 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குப்பதிவு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். வாக்காளர் பட்டியலில் பெயர் மொத்தமாக நீக்கப்பட்டது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கேட்டபோது எந்த பதிலும் கிடைக்கவில்லை. தற்போது நாங்கள் பார்வையிட்ட வாக்குச்சாவடி மையத்தில் கூட ஒரு மூதாட்டி தனக்கு இங்கு வாக்கு இல்லை என மறுப்பதாக அழுது வருகிறார். இறந்த அவரது கணவருக்கு இங்கு வாக்குரிமை உள்ளது. இதுபோல், ஒவ்வொரு பூத்திலும் 20 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை
பாரம்பரிய பாஜக தொண்டர்களின் வாக்குரிமை ஆங்காங்கே மறுக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான தேர்தல் நடக்க வேண்டும் என மக்களும் விரும்புகின்றனர். இந்த முறைகேடுகள் குறித்து அறிக்கை தயாரித்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஆவணமாக கொடுக்க உள்ளோம். வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் தேர்தல் ஆணையம் சரியாக செயல்படவில்லை என்பதை இது காட்டுகிறது. பெயர் அளவிற்கு தேர்தல் பட்டியலுக்கான பணிகளை செய்துள்ளது. நேரடியாக ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று வாக்காளர்களின் பெயரை ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த குளறுபடிகளால் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குப்பதிவு தாமதம் ஆகி வருகிறது. தொடர்ந்து 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு சாவடி மையங்களில் தொடர்ந்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார்.