Local Body Election 2022: "வரவேற்பு நல்லாத்தான் தர்றீங்க, ஆனா வெற்றி மட்டும் கொடுக்க மாட்டேங்கறீங்க" - உதயநிதி ஸ்டாலின்
'கட்சிகாரர்களின் காலில் விழுந்து முதல்வரானவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை மிரட்டுவதா? என்றார்
சேலம் மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து. சேலம் மாவட்டம் ஆத்தூர், தம்மம்பட்டி, சேலம் கோட்டை, ஆட்டையாம்பட்டி மற்றும் சங்ககிரியில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது, சேலம் மாவட்ட மக்களை நம்பவே முடியாது. இதே உற்சாகமும் வரவேற்பும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது 11 தொகுதிகளில் ஒரு தொகுதியை மட்டுமே வெற்றிபெறச்செய்து, 10 தொகுதிகளில் தோல்வியடைய செய்தீர்கள். 11 தொகுதிகளிலும் வெற்றியை கொடுத்தீர்களா என மக்களிடம் கேள்வி எழுப்பினார். நீங்கள் வாக்களிக்காவிட்டாலும் மற்ற மக்கள் திராவிட முன்னேற்ற கலகத்திற்கு வாக்களித்து ஆட்சியில் அமர வைத்துள்ளனர். இருந்தாலும் நான் உங்களை தேடி வந்துள்ளேன். முதல்வர் ஸ்டாலின் சொன்னதைப்போல் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்காகவும், வாக்களித்த மக்களுக்கும் உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்களை மக்கள் வெற்றி பெற வைக்க செய்ய வேண்டும் என்றார்.
கொரோனாவிலும் கொள்ளை அடித்த ஆட்சி அதிமுக ஆட்சி. அதிமுக ஆட்சியில் வெறும் 1 கோடி தடுப்பூசி மட்டுமே போடப்பட்டது. ஆனால் திமுகவின் 9 மாத கால ஆட்சியில் 10 கோடி தடுப்பூசி போட்டுள்ளோம். தமிழகத்தை 5.75 லட்சம் கோடி கடனில் அதிமுக அரசு விட்டு சென்றது. இருப்பினும் ரேஷன் கார்டுக்கு 4 ஆயிரம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம், பொங்கல் தொகுப்பு, இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் நிறைவேற்றியவர். சட்டசபையை முடக்க போவதாக அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறி வருகிறார், அதை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. 'சசிகலாவின் காலைப் பிடித்தேன் டேபிளுக்கு அடியில் சென்று முதல்வர் ஆனவர் இல்லை எங்கள் தலைவர், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்'. கட்சிகாரர்களின் காலில் விழுந்து முதல்வரானவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை மிரட்டுவதா? என்று பேசியவர் மிசாவையே பார்த்தவர் எங்கள் தலைவர் என்று அதிமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மிக விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றார்.
உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் திமுக அரசே முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய என்று எழுதிய பதாகையுடன் வந்த நபரை சூழ்ந்த திமுகவினர் பதாகையை பறிக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரை காவல்துறையினர் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.