PM Modi on Rahul Gandhi: அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் - பிரதமர் மோடி பேச்சு!
உத்தரபிரதேசம் ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பர்தமானில் இன்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார் பிரதமர் மோடி. நேற்று மாலை கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமர் மோடி, பர்தமானை தொடர்ந்து, கிருஷ்ணாநகர் மற்றும் போல்பூர் மக்களவை தொகுதியில் உரையாற்ற இருக்கிறார்.
உத்தரபிரதேசம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என இன்று காலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக நிலையில், இதுகுறித்து மேற்கு வங்கத்தில் உள்ள பர்தமான் மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ”அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு அதீத பயம் ஏற்பட்டதால் தொகுதி மாறியுள்ளார். வயநாடு தொகுதியில் தோற்றுவிடுவோம் என தெரிந்ததால் புதிய தொகுதியில் போட்டியிடுகிறார். சோனியா காந்தி போட்டியிட பயந்து மாநிலங்களவை எம்.பி. ஆகியுள்ளார்.” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு நான் நம்பமுடியாத அளவிற்கு ஆசீர்வதிக்கப்பட்டவன். பிரதமர் பதவியை பிடிப்பதும், அதன் பலன்களை அனுபவிப்பதும் மட்டுமே எனது குறிக்கோளாக இருந்திருந்தால், நான் அதை ஒரு மாதத்தில் அடைந்திருக்க முடியும். ஆனால், உங்களுக்குச் சேவை செய்ய வேண்டும். நமது தேசத்துக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஒற்றைத் தீர்மானத்துடன் நான் இங்கு இருக்கிறேன்.
உங்கள் கனவுகளை நிறைவேற்றுவதே எனது வாழ்க்கையின் நோக்கம். உங்கள் ஒவ்வொருவருக்கும், நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சேவை செய்ய நான் இங்கு வந்துள்ளேன். உங்கள் குழந்தைகள் உங்கள் எதிர்காலம் மட்டுமல்ல, அவர்கள் நமது தேசத்தின் எதிர்காலம், உங்களுடன் சேர்ந்து அந்த எதிர்காலத்தை வடிவமைக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த தேசத்தில் வறுமையைப் பார்ப்பது எனது கவலையை அளிக்கிறது. ஆனால் இந்தியாவின் முன்னேற்றம் எனக்கு நம்பிக்கையை நிரப்புகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளனர். அதனால்தான் நான் வறுமையில்லா இந்தியாவுக்காக இடைவிடாமல் உழைத்து வருகிறேன்.
இந்த டிஎம்சி-இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸார் என்ன செய்கிறார்கள்? அவர்கள் மோடியை சுடுங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் நான் உறுதியாக இருக்கிறேன். என் நாட்டு மக்களுக்கு எவ்வளவு அதிகமாக சேவை செய்கிறேன் என்று நன்றாக தெரியும். ” என்றார்.
மேற்கு வங்கத்தின் நிலைமையை பற்றி பேசிய பிரதமர் மோடி, “இடதுசாரி-காங்கிரஸுக்கும் டிஎம்சிக்கும் வளர்ச்சிக்கான தொலைநோக்குப் பார்வை இல்லை.
மதத்தை அடிப்படையாகக் கொண்ட காங்கிரஸின் பிளவுபடுத்தும் அரசியலை மேற்கு வங்கம் எடுத்துக்காட்டுகிறது. இதற்கு மாறாக, மோடியின் CAA சிறுபான்மையினரான இந்துக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள், கணிசமான எண்ணிக்கையிலான ஒடுக்கப்பட்ட தலித், நாம்சுத்திரா மற்றும் சந்தால் மக்களின் பாதுகாப்பை உறுதியளிக்கிறது. வருந்தத்தக்க வகையில், காங்கிரஸ், டிஎம்சி-இடதுசாரிகள் மற்றும் இந்திய கூட்டணி ஆகியவை சிஏஏவை ஒழிக்கும் திட்டங்களை அறிவித்துள்ளன.
ஊடகங்களும் வல்லுனர்களும் இன்னும் தேர்தல் முடிவுகள் பற்றி ஊகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கருத்து அல்லது கருத்துக்கணிப்பு தேவை இல்லை. முடிவு தெளிவாக உள்ளது. அவர்களின் காங்கிரஸ் தலைவர் வயநாட்டில் தோற்றுவிடுவோமோ என்ற பயத்தில் உள்ளார். இப்போது, அவர் அமேதியிலிருந்து ரேபரேலிக்கு ஓடிவிட்டார். காங்கிரசுக்கு இந்த முறை குறைவான இடங்களே கிடைக்கும். அவர்கள் வெற்றி பெறவும், நாட்டைப் பிளவுபடுத்தவும்தான் போட்டியிடுகிறார்கள் என்பது தெளிவாகிறது.” என பேசினார்.