(Source: ECI/ABP News/ABP Majha)
Odisha Election Result 2024: ஒடிசாவில் 25 ஆண்டுகால சாம்ராஜ்ஜியம் சரிந்தது - நவீன் பட்நாயக்கை வீழ்த்தி பாஜக ஆட்சி?
Odisha Election Result 2024: ஒடிசாவில் 25 ஆண்டுகாலமாக ஆட்சி செய்து வந்த பிஜு ஜனதா தளம் தோல்வியை தழுவி ஆட்சியை இழக்கிறது.
Odisha assembly Election Result 2024: ஒடிசாவில் 25 ஆண்டுகாலமாக நடைபெற்று வரும், நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது. அம்மாநிலத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன், மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்றது. மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 74 தொகுதிகளை கைப்பாற்றினால், பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும்.
ஒடிசாவில் பாஜக ஆட்சி:
மே 13ம் தேதி முதல் ஜுன் 1ம் தேதி வரை, 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போதைய சூழலில், பாஜக 82 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தற்போதைய ஆளும்கட்சியான பிஜு ஜனதா தளம் 45 தொகுதிகளிலும், காங்கிரஸ் 11 தொகுதிகளிலும் மற்றவை 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. இதனால், 25 ஆண்டுகளாக முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் தலைமயிலான ஆட்சி, ஒடிசாவில் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலிலும் பாஜக ஆதிக்கம்:
ஒடிசா சட்டமன்ற தேர்தலில் மட்டுமின்றி, மக்களவை தேர்தலிலும் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறது. தற்போதைய சூழலில், பாஜக 18 மக்களவை தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது. பிஜு ஜனதா தளம் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் பிஜு ஜனதா தளம் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 8 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது.