Urban Local Body Election 2022: சேலம் மாவட்டத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்த வேட்பாளர்கள் குறித்த செய்தி தொகுப்பு.
227 வது முறையாக வேட்புமனுத் தாக்கல் செய்த நபர்... ஒரே பெயர்களில் திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
சேலம் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் 699 கவுன்சிலர்கள் பதவிக்கு வரும் 19 ஆம் தேதி 1,519 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சேலம் மாநகராட்சியில் 50 சதவீத தொகுதிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அம்மாபேட்டை, சூரமங்கலம், கொண்டலாம்பட்டி மற்றும் அஸ்தம்பட்டி மண்டல அலுவலகங்களில் வேட்புமனு தாக்கல் செய்தனர். சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7,19,361 பேர் உள்ளனர். வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை நிறைவு பெற்றுள்ள நிலையில் சேலம் மாவட்டத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்த வேட்பாளர்கள் பற்றி பார்க்கலாம்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள ராமன் நகர் பகுதியை சேர்ந்த டயர் கடை உரிமையாளரான தேர்தல் மன்னன் பத்மராஜன் இதுவரை ஜனாதிபதி தேர்தல் முதல் பஞ்சாயத்து தேர்தல்களில் 227 தேர்தல்களில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இவர் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேட்டூரை அடுத்த வீரக்கல்புதூர் பேரூராட்சி வார்டில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். 226 முறை வேட்புமனு தாக்கல் செய்துள்ள இவர் இதுவரை ஒரு முறை கூட வெற்றிபெற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாநகராட்சி 18 வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் ராதிகா தனது ஆதரவாளர்களுடன் சூரமங்கலம் மண்டல அலுவலம் வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சேலம் மாநகராட்சியில் போட்டியிடும் ஒரே திருநங்கை இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாநகராட்சி பகுதி உள்ள 13 வது டிவிசனில் தேமுதிக சார்பில் போட்டியிடும் நாராயணன் என்ற வேட்பாளர் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது போல நகை கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி உடல் முழுவதும் கவரிங் நகைகளை அணிந்து வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள 10 வது கோட்டத்தில் போட்டியிடும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஒரே பேர் கொண்டவர்களாக உள்ளனர். திமுக சார்பில் ஆர். சாந்தி, அதிமுக சார்பில் ஆர். சாந்தியும், போட்டிருக்கின்றனர். ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 54 வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளர் G. கனிமொழியும், அதிமுக சார்பில் வேட்பாளராக S. கனிமொழியும் போட்டியிடுகின்றனர். பெயர் ஒன்றாக இருந்தாலும் எங்களுக்கு சின்னமே முக்கியம் என தெரிவிக்கின்றனர் வேட்பாளர்கள்.